கோவாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி அரசு ஸ்டிக்கர் ஒட்டி மதுவிற்பனை : மதுபானக் கடை அதிகாரி உட்பட 8 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2022, 1:25 pm

ஆந்திரா : கோவாவில் இருந்து ஆந்திராவுக்கு மது பாட்டில்களை கடத்தி ஸ்டிக்கர் மாற்றி அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயராவ் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, கோவாவில் இருந்து ஆந்திராவுக்கு ஏராளமான அளவில் மதுபாட்டில்களை கடத்தி அவற்றை அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.

எனவே கலால் துறையினருடன் இணைந்து போலீசார் தனிப்படை அமைத்து மதுபான கடத்தல் பற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கோவாவிலிருந்து நெல்லூர் மாவட்டத்திற்கு பெருமளவில் மது கடத்தல் நடைபெறுவது தெரியவந்தது.

மேலும் கடத்தல் மதுபாட்டில்களை நெல்லூரில் உள்ள ரகசிய கிடங்கு ஒன்றில் பதுக்கி வைத்து அவற்றிற்கு போலி லேபிள்களை ஒட்டி அரசு மதுபான கடைகளுக்கு சப்ளை செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு நெல்லூரில் உள்ள ரகசிய கிடங்கில் சோதனை செய்த போலீசார் அங்கிருந்து 23 லட்ச ரூபாய் மதிப்பிலான 18,000 மதுபாட்டில்கள், 1 கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த முறைகேட்டில் அரசு மதுபானக் கடைகளின் சூப்பர்வைசர்கள் ஒத்துழைப்பு அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அரசு மதுபானக்கடை சூப்பர்வைசர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று அப்போது கூறினார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1388

    0

    0