நீரவ் மோடிக்கு புதிய நெருக்கடி… இந்திய அரசு போட்ட பிளான் : லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan24 November 2022, 10:11 pm
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றவாளியான நீரவ் மோடி லண்டனில் உள்ளார். குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.
பணத்தை திருப்பிச் செலுத்தாததால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வங்கித் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவர் பிரிட்டனுக்கு தப்பி ஓடினார்.
முன்னதாக நீரவ்வை நாடு கடத்த லண்டன் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டில், நீரவ் தனது மோசமான மனநிலையை மேற்கோள் காட்டி, தன்னை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததார். தான் தற்கொலை செய்ய நேரிடும் என்று தெரிவித்தார்.
அவர் தன்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதிட்டு வந்தார். நீரவ் மோடிக்கு மனநிலை சரியில்லை என்றும், அவரை இந்தியாவுக்கு அனுப்ப முயன்றால் அவர் தற்கொலை செய்துகொள்வார் என்றும் வாதிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த விசாரணையின் போது, ஐகோர்ட் நீதிபதிகள் அவரது மேல்முறையீட்டில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் தேவையற்றவை என்று ஒப்புக்கொண்டனர்.
மருத்துவ சோதனைகளின் அடிப்படையில் அவரது மனநிலை நன்றாக இருப்பதையும், தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்பதையும் உறுதி செய்த நீதிமன்றம், அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இம்மாத தொடக்கத்தில் உத்தரவிட்டது.
அவரை இந்தியாவுக்கு அனுப்புவதால் நிரவ் தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் இல்லை. அவரை இந்தியாவுக்கு அனுப்புவது அநியாயம் என்று அவரது மேல்முறையீட்டில் கூறியிருந்த விஷயங்களையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ஆகவே அவரை இந்தியாவுக்கு அனுப்பி சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது என்று கூறி லண்டன் ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், நீரவ் மோடி, தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி லண்டன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 2 வார கால அவகாசம் கோரி, லண்டன் ஐகோர்ட்டில் நீரவ் மோடி மனு தாக்கல் செய்துள்ளார்.