சாராய கும்பலை பிடிக்க போன இடத்தில் சாட்சியாக மாறிய கிளி : விசாரணை நடத்திய காவல்துறை..!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2023, 12:29 pm

பீகாரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக மாநில அரசு கடுமையான தடை விதித்து உள்ளது. இந்த தடை கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தி அதனை தீவிரமுடன் அரசு கடைப்பிடித்து வருகிறது.

முதலமைச்சர் நிதீஷ் குமார் உத்தரவின் பேரில் மாநிலத்தில் மதுபான தடை அமலில் உள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மத்தியில் பீகாரில் சரண், சிவான் மற்றும் பெகுசராய் உள்ளிட்ட மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதில், பாதிக்கப்பட்ட 30 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 25-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பார்வையும் பறிபோயுள்ளது. இந்த விவகாரம் பற்றி விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து, ஆணைய உறுப்பினர்கள் 9 பேர் அடங்கிய கமிட்டியினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும், சில இடங்களில் மதுபான விற்பனை நடந்து வருகிறது. இதன்படி, கடந்த 22-ந்தேதி பீகாரில் விஷ சாராயம் குடித்ததில் 3 பேர் பலியானதுடன், 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு கொண்டுக்கு செல்லப்பட்டனர். இது அரசுக்கு மீண்டும் தலைவலி ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் போலீசார் முகாம்களை அமைத்து உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனை அடுத்து, மதுபானம் மற்றும் சாராய கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பீகாரின் கயா மாவட்டத்தில் குருவா பகுதி போலீசாருக்கு, வீடு ஒன்றில் சாராய கும்பல் சட்டவிரோத சாராய உற்பத்தியில் ஈடுபடும் உளவு தகவல் கிடைத்தது.

இதனால் உஷாரான போலீசார், துணை காவல் ஆய்வாளர் கன்னையா குமார் தலைமையிலான தனிப்படை அமைத்து, உடனடியாக சாராய கும்பலை பிடிப்பதற்காக விரைந்து சென்றனர். எனினும், அவர்கள் வரும் தகவல் அறிந்து சாராயம் காய்ச்சி கொண்டிருந்த, வீட்டில் இருந்தவர்கள் குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டனர்.

அந்த வீட்டில் அமிர்தமல்லா என்பவர் வசித்து உள்ளார். போகிற அவசரத்தில் வீட்டில் வளர்த்து வந்த கிளியை விட்டு விட்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து, கிளிக்கு தகவல் தெரிந்திருக்கும் என்ற அடிப்படையில் அதிகாரி கன்னையா, அதனிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்க தொடங்கினார். அவரது கேள்வி ஒவ்வொன்றையும் கிளி உன்னிப்பாக கவனித்தது.

கிளியிடம் கன்னையா, அதன் உரிமையாளர் எங்கே பதுங்கி இருக்கிறார்? என கேட்கிறார். ஆனால், கிளி பதிலாக தொடர்ந்து, கடோரா, கடோரா (உணவு வைக்கும் கிண்ணம்) என்று மட்டுமே கூறி கொண்டிருந்து உள்ளது. வேறு எந்த தகவலையும் கூறவில்லை.

எனினும், அந்த அதிகாரி தொடர்ந்து அதனிடம் விசாரணை நடத்திய வீடியோ வைரலாக பரவி வருகிறது. பீகாரில் ஆளும் கட்சி உறுப்பினர்களே சட்டவிரோத மதுபான உற்பத்தி ஆலைகளுடன் தொடர்பில் உள்ளனர் என்று பா.ஜ.க. தொடர்ந்து அதிரடியான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.

பீகாரின் வைஷாலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஹாஜிப்பூர் நகர பகுதிகளில் மதுபான பாட்டில்களை வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யும் தகவலும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது. இதுபற்றி கலால் துறையும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 433

    0

    0