தேர்தலில் ஜெகன் வெற்றி பெறுவார் என ₹30 கோடி பந்தயம் கட்டிய கட்சி நிர்வாகி மர்ம மரணம்.. ஆந்திராவில் அதிர்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan10 June 2024, 5:07 pm
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலை வைத்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பல கோடிக்கு மாநிலம் முழுவதும் பந்தயம் கட்டப்பட்டது.
ஆனால் அக்கட்சி எதிர்பார்த்து வெற்றி கிடைக்காமல் படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியை நம்பி பணம் கட்டியவர்கள் கடுமையான விளைவுகளை சந்தித்து வருகின்றனர்.
ஏலுரு மாவட்டம், நுஜிவேடு மண்டலம் தூர்பு திகவல்லி கிராமத்தை சேர்ந்த வேணுகோபால் 52 ஏழாவது வார்டு கவுன்சிலர் அவரது மனைவி விஜயலட்சுமி பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.
வேணுகோபாலரெட்டி, அவரது மனைவியும் கிராமத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்தபடி அரசியல் ரீதியாக தீவிரமாக இருந்து வந்தனர்.
இதனால் தங்கள் கட்சியின் வெற்றியில் நம்பிக்கையுடன் பல்வேறு கிராமங்களில் வெற்றியை வைத்து சுமார் ₹ 30 கோடி வரை பந்தயம் கட்டினார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் படுதோல்வி அடைந்து தெலுங்கு தேச கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதனால் வேணுகோபால ரெட்டிக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கை நாளன்று அவர் கிராமத்தை விட்டு வெளியேறினார். பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் அவரிடம் பணம் கட்டியவர்கள் திருப்பிக் கேட்கத் தொடங்கினர்.
இந்நிலையில் ஜூன் 7-ம் தேதி வேணுகோபால ரெட்டியின் வீட்டுக்குள் புகுந்து ஏசி, சோஃபாக்கள், படுக்கைகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.
பந்தயம் கட்டியவர்கள் வீட்டில் நுழைந்து பொருட்களை எடுத்து சென்றதை அறிந்ததும் வேணுகோபாலரெட்டி விரக்தியடைந்தார். அடுத்த நாள், அவர் தனது கிராமத்திற்குத் திரும்பினார்.
பின்னர் தனது பண்ணையில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கவனித்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த சடலத்தை கைப்பற்றி நுஜிவேடு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவி விஜயலட்சுமி போலீசில் முறைப்படி புகார் அளித்ததையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் வேணுகோபால் ரெட்டி தலையில் காயம் இருப்பதால் யாராவது அடித்து கொன்று பூச்சி மருந்து குடித்து இறந்தது போன்று செய்தார்களா அல்லது அவரே பூச்சி மருந்து குடித்து இறந்தாரா என்பது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிய வரும் என்பதால் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஜெகன் மோகன் ரெட்டியின் உறுதியான வெற்றியை நம்பி, பலர் கணிசமான கடனைப் பெற்றனர். தேர்தல் முடிவில் லாபம் ஈட்டும் நம்பிக்கையில் பந்தயம் கட்டினார்கள். ஆனால் கட்சியின் எதிர்பாராத தோல்வியால், பணம் கட்டியவர்கள் இப்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
அவ்வாறு ஆந்திர மாநிலம் முழுவதும் பந்தயத்தில் ₹ 8,000 கோடி வரை அக்கட்சியினர் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதில் எந்த தொகுதியில் யார் வெற்றி, யார் ஆட்சி அமைப்பது என்றும், பெரும்பான்மையான முக்கிய தலைவர்கள் மெஜாரிட்டி என்றும் பந்தயம் கட்டினர்.
தேர்தலுக்குப் பிறகு வெளியான சர்வே முடிவுகள் ஜெகன் தனது கட்சி அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அறிக்கை அளித்தது மேலும் சூதாட்டத்திற்கு வழிவகுத்தது.
கட்சி தலைமையின் மீதான குருட்டு நம்பிக்கையும், தேர்தல் வெற்றியின் மீதான அதீத நம்பிக்கையும் பல நபர்களை கடனில் தள்ளியுள்ளது.
சிலர் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்த சோகமான நிகழ்வுகள், அரசியல் விளைவுகளின் மீது பந்தயம் கட்டுவதன் கடுமையான பின்விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது.