டிராப்பிக்கில் சிக்கிய கார்… உயிருக்கு போராடிய நோயாளி : 3 கி.மீ ஓடி சென்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்.. நெகிழ வைக்கும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan12 September 2022, 7:01 pm
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் கோவிந்த் நந்தகுமார். இவர் சர்ஜாபூரில உள்ள மணிப்பால் மருத்துவமனையில், நோயாளி ஒருவருக்கு லேப்ராஸ்கோப்பிக் முறையில் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்ய காரில் சென்று கொண்டிருந்தார்.
மருத்துவமனை 3 கிலோ மீட்டர் தொலைவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். மருத்துவமனை செல்ல பத்து நிமிடங்கள் கூட ஆகாத தொலைவு இருந்தாலும், கூகுள் மேப் அவருக்கு 45 நிமிடங்கள் வரை பயணநேரம் ஆகலாம் என காட்டியது.
இது நோயாளிக்கு மோசமான நிலையை ஏற்படுத்தலாம் என்பதால், காரிலிருந்து இறங்கிய அந்த மருத்துவர் ஓடியே மருத்துவமனை செல்ல முடிவெடுத்தார். இதனைத் தொடர்ந்து 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஓடியே மருத்துவமனைக்குச் சரியான நேரத்தில் சென்று அடைந்தார்.
இது குறித்து மருத்துவர் கோவிந்த நந்தகுமார் கூறும்போது, “நல்லவேளையாக கார் டிரைவர் இருந்ததால் காரை அவரிடம் ஒப்படைத்து விட்டுக் கிளம்பினேன். நான் ஒரு தீவிர உடற்பயிற்சியாளர் என்பதால், சாலையில் ஓடுவது என்பது எளிதாகவே இருந்தது. இப்படி இறங்கி நடப்பது எனக்கு புதிதான ஒன்று அல்ல. பல நேரங்களில் இது போன்று அவசர நிலை ஏற்படும் போது மருத்துவமனைக்கு ஓடி இருக்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ரயில் தண்டவாளங்களைக் கூட இப்படிக் கடந்து ஓடியிருக்கிறேன். நான் திடகாத்திரமாக இருப்பதால் என்னால் இதைச் செய்ய முடிகிறது. ஆம்புலன்ஸில் நோயாளியுடன் காத்திருக்கும் உறவினர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். ஆம்புலன்ஸிற்கு கூட வழிவிட இந்த நகரில் இடமில்லை என்றார்.
நோயாளிக்காக 3 கிலோ மீட்டர் ஓடி மருத்துவமனை சென்று அறுவை சிகிச்சை அளித்த மருத்துவரின் இந்த செயலுக்கு அப்பகுதியினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.