கனமழை குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் : காரில் பயணித்த போது வெள்ளத்தில் சிக்கி பலியான பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2022, 5:37 pm

தெலுங்கானா : செய்தி சேகரிப்பதற்காக சென்ற நிருபர் காருடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கன மழை காரணமாக கோதாவரி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இது தவிர தொடர்மழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜெகத்தியாலா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜெகத்தியாலா மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள கிராமங்களில் பொதுமக்கள் படும் சிரமங்கள் பற்றி செய்தி சேகரிக்க தெலுங்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஜெகத்தியாலா மாவட்ட நிருபர் ஜமீல் காரில் சென்றார்.

அப்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த பாலத்தின் மீது கார் பயணித்த போது வெள்ளத்தில் சிக்கி இழுத்து சென்றது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரை காணாமல் தேடி வந்தனர்.

ஜமீல் காணாமல் போனது தொடர்பாக அவருடைய குடும்பத்தினரும் அவர் பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனமும் புகார் அளித்திருந்தது. இந்த நிலையில் இன்று அவர் பயணித்த கார் நொறுங்கிய நிலையில் ஜெகத்தியாலா அருகே ஓடை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது.

இதையடுத்த காரில் இருந்த ஜமீல் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சக செய்தியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி