திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தரிசனம் : எஸ்எஸ்எல்வி 2 மாதிரி ராக்கெட்டை வைத்து பூஜை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2023, 9:55 am

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாளை எஸ். எஸ். எல். வி. 2 ரக ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவ இருக்கும் நிலையில் இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி மலையில் வழிபாடு.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது.

அந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.

இதில் ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இதனுடைய இறுதிகட்ட பணியான கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் எஸ்எஸ்எல்வி 2 ராக்கெட் மாதிரியுடன் இன்று காலை திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டனர்.

அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன. முன்னதாக எஸ்எஸ்எல்வி 2 ராக்கெட் மாதிரிக்கு ஏழுமலையான் திருவடிகளில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!