சிறையில் சொகுசு வாழ்க்கை.. ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் வசதி… சர்ச்சையில் சிக்கிய CM கெஜ்ரிவால்..!!

Author: Babu Lakshmanan
19 November 2022, 11:27 am

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். கடந்த 2017ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இது தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், கடந்த மே 30-ம் தேதி அமலாக்கத் துறை, சத்யேந்திர ஜெயினை கைது செய்தது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சத்யேந்திர ஜெயின் மற்றும் அவருடன் கைதான வைபவ் ஜெயின், அங்குஷ் ஜெயின் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், திகார் சிறையில் சத்யேந்திர ஜெயினுக்கு சொகுசு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வீடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சிறையில் இருக்கும் அவருக்கு ஒரு நபர் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

மேலும், அவர் தங்கியிருக்கும் அறையில் மெத்தை படுக்கை, டிவி, வாட்டர் பாட்டிலில் தண்ணீர் உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. தவறு செய்யும் அமைச்சரை தண்டிக்காமல், சிறையில் இதுபோன்ற வசதிகளை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் செய்து கொடுத்துள்ளாரா..? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

  • Selvaraghavan Viral Video உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!