லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து.. மீட்பு படை வருவதற்குள் பக்கெட்டுகளுடன் படையெடுத்த பொதுமக்கள் : தலையில் துண்டு போட்ட வியாபாரி!!
Author: Udayachandran RadhaKrishnan20 July 2022, 5:00 pm
ஆந்திரா : கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த நல்லெண்ணெய் லாரியில் இருந்து வெளியேறிய எண்ணையை வாளி, குடம் ஆகியவற்றை எடுத்து வந்து பொதுமக்கள் பிடித்து சென்றனர்.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சல்லகுண்டா கிராமம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நல்லெண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தலைகீழாக கவிழ்ந்தது.
இதனால் டேங்கரில் இருந்து வெளியேறிய நல்லெண்ணெய் லாரி கவிழ்ந்த இடத்தின் அருகே இருக்கும் குட்டை போன்ற சிறிய குழியில் சென்று சேர்ந்தது. இதனை அறிந்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வாளி, குடம் ஆகியவற்றை எடுத்து வந்து குட்டையில் தேங்கிய நல்லெண்ணெயை வீட்டிற்கு பிடித்து சென்றனர்.
தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி நல்லெண்ணெய் விலை லிட்டர் சுமார் 300 ரூபாயாக உள்ளது. கவிழ்ந்த லாரியில் சுமார் 18,000 லிட்டர் நல்லெண்ணெய் ஏற்றப்பட்டு இருந்தது. இதனால் நல்லெண்ணெய் வாங்கி சென்ற வியாபாரிக்கு சுமார் 50 லட்ச ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வியாபாரிக்கு ஏற்பட்ட இழப்பை கூட கருத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் நல்லெண்ணையை தாங்கள் வீடுகளுக்கு பிடித்து சென்றது அந்த வழியாக சென்ற மனிதாபிமானமிக்க பொதுமக்களுக்கு முகசுழிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.