தமிழகத்தில் வலுவடையும் பாஜக…சைலண்ட் Mode-ல் திமுக : கொந்தளிக்கும் கூட்டணி..?
Author: Udayachandran RadhaKrishnan22 April 2022, 7:38 pm
பிரதமர் மோடியின் தலைமை பண்பை பாராட்டும் விதமாக தமிழகத்திலிருந்து இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் போன்ற பிரபலங்கள் கருத்து தெரிவித்து இருப்பது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மோடிக்கு பெருகும் ஆதரவு
அதுவும் தமிழகத்தில் பிரதமர் மோடி, பாஜகவுக்கு எதிராக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டமைத்து வரும் எதிர்மறைப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் இந்தக் கருத்துகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு புகழாரம் சூட்டிய இளையராஜா
இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், பிரபல இசையமைப்பாளர் இளையராஜாதான். அண்மையில், ‘அம்பேத்கரும் மோடியும், என்ற தலைப்பிலான புத்தகத்திற்கு அவர் எழுதிய முன்னுரையில் “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். மோடியின் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா, இப்படி மோடியை பாராட்டுவார் திமுகவினரோ, காங்கிரஸ் விசிக, மார்க்சிஸ்ட் கட்சியினரோ சிறிதும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.
இளையராஜாவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்
பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், திரையுலகுக்கு வரும் முன்பு
கம்யூனிச சித்தாந்தத்தை தூக்கிப் பிடித்தவர் என்பதாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினரும் இதற்காக இளையராஜாவை வசைமாரி பொழிந்தனர்.
ஆனால் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசியதை ஒருபோதும் திரும்ப பெற மாட்டேன் என்று இளையராஜா, உறுதிபட அறிவித்து சமூக ஊடகங்களில் தன்னை அவமானப்படுத்தியவர்களின் மூக்குகளை உடைத்தார்.
பிரதமரை பாராட்டிய பாக்யராஜ்
இதையடுத்து, பாஜகவிழா ஒன்றில் கலந்துகொண்டு, பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் மோடியைப் போல சுறுசுறுப்பானதொரு பிரதமரை இதுவரை நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட மோடியை விமர்சிப்பவர்களை குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டார். அவர் இப்படி கூறியதற்கு, சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் தொடர்பான கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் பாக்யராஜ் தெரிவித்தார். என்றபோதிலும் மோடியை பெருமைப்படுத்தும் விதமாக பேசியதை அவர் திரும்பப் பெறவில்லை.
இந்த நிலையில்தான் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், பிரபல கல்வியாளருமான பாரிவேந்தர் எம்பி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு அதிர்ச்சி அளிப்பதுபோல பிரதமர் மோடியை புகழ்ந்தார்.
திமுகவுக்கு ஷாக் கொடுத்த பாரிவேந்தர் எம்பி
அதுமட்டுமின்றி, நீட் தேர்வை தமிழக அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது. பாரிவேந்தர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கூறும்போது, “மோடி எங்களுக்கு பங்காளியும் அல்ல, பக்கத்து வீட்டுக்காரரும் அல்ல, பக்கத்து மாநிலக்காரரும் இல்லை. இந்த நாட்டின் மீது பற்று கொண்ட ஒரே ஒரு நபர் மோடிதான். நம் நாட்டின் மீது பற்று கொண்டவர்களில் காந்தி போன்றவர்களை பார்த்திருப்போம். அதன் பிறகு, தற்போதுதான் இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும். உலக நாடுகள் மத்தியில் இந்தியா என்றால் தலைநிமிர்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டு வரும் ஒரு தலைவரை நான் காண்கிறேன்.
விரைவில் மோடியை தமிழகம் ஏற்கும்
அவருக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ச்சியாக தவறான தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் விரைவில் மோடி குறித்து புரிந்து கொள்வார்கள். அவரை நேசித்து ஏற்றுக் கொள்வார்கள். இந்தியாவின் பெருமையை பாதுகாக்க, நாட்டுப்பற்றுடன் உழைத்து வரும் தலைவர்தான் மோடி. அவரை தமிழகம் புகழ்ந்து பாராட்டும் காலம் விரைவில் வரும்.
நீட் தேர்வுக்கு ஆதரவு
போட்டித்தேர்வை எதிர்கொள்ள அடிப்படைக் கல்வி வலுவாக இருக்க வேண்டும். அதற்கான தகுதியை தமிழக மாணவர்கள் வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். சற்று கடினமாக இருந்தாலும் கூட, நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை சரியானது. அதிலிருந்து ஒன்றிரண்டை எடுத்து போட்டு உருவாக்கும் மாநில கல்விக் கொள்கை தேவையற்றது. மருத்துவக் கல்வி உட்பட விண்ணப்பங்கள் அதிகமாக வரும்போது போட்டி தேர்வுகள் மட்டுமே சமூக நீதியை பாதுகாக்கும்” என்று அதிரடியாக குறிப்பிட்டார்.
இப்படி பிரதமர் மோடிக்கு பாரிவேந்தர் எம்பி புகழாரம் சூட்டி இருப்பது திமுக தலைமையை மட்டுமின்றி திமுகவின் 12 கூட்டணி கட்சிகளையும் எரிச்சலடைய வைத்திருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
திமுக கூட்டணிக்கு பலத்த அடி
“கடந்த 4 நாட்களில் மட்டும், இளையராஜா, பாக்யராஜ் பாரிவேந்தர் என்று தமிழக பிரபலங்கள் பிரதமர் மோடியை அடுத்தடுத்து புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.
முதல் இருவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதால் அவர்கள் பேசியது அச்சு, காட்சி, சமூக ஊடகங்கள் வழியாக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போய் சேர்ந்துவிட்டது. இது திமுக தலைமை எதிர்பார்க்காத ஒன்று. இன்னும் ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்கள் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை மனதார போற்றுகின்றனர். ஆனால் அவர்களுடைய எதிர்கால சினிமா வாழ்க்கை
2 பெரிய படக் கம்பெனிகளிடம் சிக்கியுள்ளது. அதனால் வேறு வழியின்றி தற்போது அமைதி காக்கின்றனர்.
நீட் தேர்வை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பாரிவேந்தர் கூறியிருக்கிறார். மருத்துவ கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அவரே இப்படி பேசியிருப்பது நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் கிடைத்த பலத்த அடியாகவே கருதப்படுகிறது.
வாய் திறக்காத திமுக
இளையராஜாவையும், பாக்யராஜையும் விமர்சித்தால் அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று கருதி மோடியை அவர்கள் புகழ்ந்தது பற்றி திமுக வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வருகிறது.
அதேநேரம் மகாத்மா காந்தியுடன், மோடியை ஒப்பிட்டு பாரிவேந்தர் எம்பி
பேசியிருப்பதோடு மேலும் இரண்டு விஷயங்களில் மத்திய பாஜக அரசை பாராட்டியதை திமுக துளியும் விரும்பாது என்றே கூறலாம்.
பாரிவேந்தர் மீது பாய்ச்சலில் திமுக
ஏனென்றால் கடந்த 2017 முதல் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலினும், உதயநிதியும் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் திமுக அரசு அமைந்து 11 மாதங்கள் ஆகிவிட்ட பிறகும் கூட நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை.
அதுமட்டுமல்லாமல் தேசிய கல்வி கொள்கையே போதுமானது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித் தனியாக கல்விக் கொள்கை தேவையில்லை என்று பாரிவேந்தர் கூறியிருப்பதும், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும். ஏனென்றால் நாடாளுமன்றத்தில், அவரது பெயர் திமுக எம்பிக்கள் பட்டியலில்தான் உள்ளது.
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பார்க்கவ குல வகுப்பினரிடையே அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. அதனால்தான் பாரி வேந்தர் பெரம்பலூர் தொகுதியை ஏற்றுக்கொண்டு அங்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்
எனவே 2024 தேர்தலில் திமுக கூட்டணியில் அவருடைய கட்சி இல்லாத பட்சத்தில் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்தபட்சம் 7 தொகுதிகளில் பாதிக்கப்படும்
வாய்ப்பு உள்ளது. அதனால்தான் அவர் துணிந்து மோடிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
ஆக, தமிழகத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இப்போதே அனல் பறக்க தொடங்கி விட்டது என்பது மட்டும் உண்மை!