இதுதான் தேசிய கட்சிகளின் புத்தி… கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவகுமாருக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
11 March 2024, 10:05 pm

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறிய கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, மாளவல்லியில் உள்ள ஷிவா நீர்த்தேக்கத்தை நிரப்புவதற்காக கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதாகவும், அங்கிருந்து பெங்களூருக்கு குடிநீர் தேவைக்கு நீர் கொண்டுசெல்லப்படுவதாகவும் அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேஆர்எஸ் அணையிலிருந்து பெங்களூருக்கு தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலத்துக்கு அல்ல. என்ன ஆனாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது. தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் உள்ளன. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல.

பெங்களூருவுக்கு தண்ணீர் பம்ப் செய்யும் இடத்தில் நீர் மட்டம் குறைவாக உள்ளது. தண்ணீர் பம்ப் செய்யப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் நீர் இருக்க வேண்டும். இதனால் அந்த அளவை பராமரிக்க தண்ணீர் விடுவிக்கப்பட்டது. பெங்களூரின் தண்ணீருக்காக, நீர் திறக்கப்பட்டது, எனக் கூறியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறிய கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமாருக்கு கடும் கண்டனம். இது மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையில் தேசிய கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு ; பாசாங்கு தன்மையை பிரதிபலிக்கிறது. தமிழக மக்களின் உரிமைகளை காப்பதில் அதிமுக தொடர்ந்து உறுதியாக உள்ளது, எனக் கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!