துணை முதல்வர் பதவியை துரத்தி துரத்தி பிடிக்கும் அஜித் பவார்…நினைச்சதை சாதித்து காட்டினாரா?
Author: Udayachandran RadhaKrishnan2 July 2023, 4:47 pm
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால் கட்சியை உடைத்தார் அஜித் பவார். இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர்.
இந்தநிலையில், சிவசேனா – பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார்.
அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பதவி ஏற்றுக்கொண்டார். மராட்டிய மாநிலத்தில் 8ஆவது துணை முதல்-மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார்.
2019ல் பாஜகவுடன் இணைந்து மராட்டிய துணை முதல்-மந்திரியாக பதவியேற்று பின்னர் விலகினார். பதவியேற்ற 80 மணிநேரத்தில் துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் மீண்டும் இணைந்தார்.
பின்னர் காங்கிரஸ் உள்ளிட்ட மகா விலாஸ் அகாதி கூட்டணியில் மீண்டும் துணை முதல்-மந்திரி ஆனார் அஜித் பவார். மராட்டியத்தில் 20210-2014-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி அரசில் இருமுறை துணை முதல்-மந்திரியாக இருந்துள்ளார்.
2019-ம் ஆண்டில் திடீரென அதிகாலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரி ஆனார், ஆனால் பெரும்பான்மை இல்லாததால் 3 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.
2019-2022 வரை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே அரசில் துணை முதல்-மந்திரியாக இருந்தார். தற்போது மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்-மந்திரியாக ஆகி உள்ளார் அஜித் பவார்.