மே. வங்கத்தில் துணைவேந்தரை மிரட்டிய பல்கலை., மாணவர்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ… முழு அறிக்கை சமர்பிக்க ஆளுநர் அதிரடி உத்தரவு

Author: Babu Lakshmanan
4 April 2022, 4:35 pm

மேற்குவங்கத்தில் உள்ள ஆலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மாணவர்கள் மிரட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்.,1ம் தேதி மேற்கு வங்கத்தில் ஆலியா பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பினர், துணைவேந்தரின் அறைக்குள் புகுந்து, துணைவேந்தர் முகமது அலியை கடுமையாக மிரட்டியதும், அவரை அவமதித்து தகாத வார்த்தைகளை சொல்லி கிண்டலடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கைப் பட்டியலைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற வேண்டும் என்றும், இல்லையேல், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர்கள் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. மாணவர்கள் தனது இருக்கையின் அருகே நின்று கொண்டு கடுமையாக பேசிய நிலையிலும், எந்தவித சலனமும் இல்லாமல் அவர் அமர்ந்திருந்தது அந்த வீடியோ காட்சிகளில் தெரிந்தது. இந்த சம்பவத்திற்கு பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

மாணவர்கள் தன்னை மிரட்டியது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் உதவ முன்வரவில்லை என்று பாதிக்கப்பட்ட துணைவேந்தர் முகமது அலி புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரது இந்தப் புகாரை போலீசார் மறுத்து தெரிவித்தனர்.

https://twitter.com/i/status/1510582776957124612

இந்த வீடியோவை பகிர்ந்த அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர், இதுபோன்ற நபர்களால், சட்டம் ஒழுங்கை மதித்து நடப்பவர்களுக்கும் அச்சத்தை உண்டாக்கும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மேற்கு வங்க தலைமை செயலருக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, துணைவேந்தரை மிரட்டிய விவகாரத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் கியாசுதீன் மொண்டல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதேவேளையில், “வங்க மண்ணின் மகள் நடத்தும் ஆட்சியில் இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதுதான் இன்றைக்கு மேற்கு வங்கத்தின் கலாச்சாரம்,” என்று எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார். மேலும், துணைவேந்தரை அவமதித்த கியாசுதீன் மொண்டல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Suvendhu_BJP_UpdateNews360

இதற்கு மறுப்பு தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், முன்பு தங்கள் கட்சியின் மாணவர் பிரிவில் கியாசுதீன் இருந்ததாகவும், ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பே அவரை நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு ஊழல் செய்த குற்றத்திற்காக ஆலியா பல்கலைக்கழகம் மாணவர் அமைப்பின் தலைவர் கியாசுதீன் மீது நடவடிக்கை எடுத்த நிலையில், தற்போது ஊழல் எனக் கூறி அவர் தற்போது போராட்டம் நடத்தியுள்ளார்.

துணைவேந்தரை மாணவர்கள் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1413

    0

    0