மீண்டும் பாஜகவுடன் கூட்டணி..? ஜெகன் மோகனுக்கு அதிர்ச்சி தந்த சந்திரபாபு நாயுடு!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2023, 11:30 am

ஆந்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச பார்ட்டி எனும் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை, உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா டெல்லியில் நேற்று மாலை சந்தித்து பேசினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. பாஜக உடனான தங்களது கூட்டணியை மீண்டும் புதுப்பிக்க தயாராக உள்ளதாக, சந்திரபாபு நாயுடு கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகாக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தபிறகு, அந்த கூட்டணியில் இருந்து முதலில் விலகியவர் சந்திரபாபு நாயுடு தான். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் தொடர்ந்து நீடித்த தாமதம் காரணமாக, 2018ம் ஆண்டு அப்போது அந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்.

அதைதொடர்ந்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தவர், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்தார்.

இந்த நிலையில் தான், கடந்த சில மாதங்களாக பாஜக உடன் கூட்டணி அமைக்கும் வகையில் சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் அவர் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு தொலைநோக்கு பார்வையாளர், அவர் தேசத்தின் கௌரவத்தை நிலைநிறுத்துகிறார் மற்றும் இந்தியாவின் வலிமையை உலகிற்குக் காட்டினார்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் மோடியுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தான், சந்திரபாபு நாயுடுவிற்கு அமித் ஷா உடனான இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அண்டை மாநிலமான தெலங்கானாவில் முக்கிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பாஜக பெற்று இருந்தாலும், ஆந்திராவில் நிலையான இடத்தை பெறமுடியாமல் தவித்து வருகிறது.

குறிப்பாக அந்த மாநிலத்தில் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தினரிடையே ஆதரவை பெற முடியவில்லை. இந்த சூழலில் பாஜக மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளும் தங்களது உறவை புதுப்பித்தால், ஆந்திரா மற்றும் பிற தென் மாநிலங்களில் தனது கால்தடத்தை விரிவுபடுத்துவதை லட்சிய இலக்காகக் கொண்டுள்ள பாஜகவிற்கே பெரும் நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!