அரசியலில் நுழைந்தார் அம்பத்தி ராயுடு.. ஆளுங்கட்சியில் இணைந்ததால் அதிர்ச்சியில் எதிர்க்கட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan28 December 2023, 7:22 pm
அரசியலில் நுழைந்தார் அம்பத்தி ராயுடு.. ஆளுங்கட்சியில் இணைந்ததால் அதிர்ச்சியில் எதிர்க்கட்சி!!
ஆந்திராவை சேர்ந்த பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு ஐபிஎல்லில் மும்பை மற்றும் சென்னை அணிக்காக விளையாடினார்.
2010 முதல் 7 வருடம் மும்பை அணியில் இருந்த அவர் பின்னர் 2018 முதல் சென்னை அணிக்காக விளையாடினார். முக்கிய நட்சத்திர வீரராக இருந்த அம்பத்தி ராயுடு சென்னை அணிக்கு பல வெற்றிகளை குவித்து தந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎஸ் தொடரில் விளையாடிய போது தனது ஓய்வை அறிவித்தார். அந்த தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போதுஅரசியிலில் நுழைந்துள்ளார். ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்ததுள்ளார்.
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். விஜயவாடாவில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த வேளையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, துணை முதல்வர் நாராயண சாமி, எம்பி பத்திரெட்டி மிதுன் ரெட்டி உள்ளிட்டவர்கள் அவருக்கு சால்வை மற்றும் கட்சியின் துண்டு போர்த்தி வரவேற்றனர்.
கட்சியில் இணைந்த உடனே அவருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்பி பதவிக்கு போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சொந்த ஊர் ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் என்பதால் மசூலிப்பட்டினம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.