ஒரு மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டை… ஒரே இரவில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டர்..!!
Author: Udayachandran RadhaKrishnan12 June 2022, 6:12 pm
காஷ்மீரில் நேற்று இரவு நடந்த என்கவுண்ட்டரில் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்த இயக்கங்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கப்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை மெய்ப்பிக்கும் விதமாக, அங்கு போலீஸார் மற்றும் பொதுமக்கள் மீது அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் எல்லையில் 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தயார்நிலையில் இருப்பதாகவும் அண்மையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறையினரும், ராணுவத்தினரும் முழுவீச்சில் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திராப்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார், ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு நேற்று இரவு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் ஒருமணிநேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விசாரணையில், அவர்களின் பெயர் ஜுனைத் ஷீர்கோஜ்ரி (25), ஃபாசில் நசீர் (32), இர்ஃபான் அகமது மாலிக் (35) என்பதும், மூவரும் லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
0
0