ஆந்திராவில் தர்பார் பட பாணியில் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் கைது

Author: Hariharasudhan
22 October 2024, 1:49 pm

ஆந்திராவில் இரண்டு சகோதரிகளை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசா காசிபுக்காவைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் உள்பட மூன்று இண்டர்மீடியட் படிக்கும் மாணவிகள், அதே பகுதியைச் சேர்ந்த இண்டர்மீடியட் தேர்வில் தோல்வி அடைந்து வீட்டில் இருக்கும் மூன்று இளைஞர்களுடன் நட்பாக இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி, அந்த இளைஞர்களில் ஒருவரின் பிறந்தநாள் என்பதால் அனைவரும் ஒன்றாக பார்ட்டி செய்ய விரும்பி உள்ளனர்.

இதற்காக பலாசா சினிமா தியேட்டர் அருகே உள்ள பாஸ்ட் புட் சென்டரில் பிரியாணி, கேக், பரிசுப் பொருட்களை வாங்கியுள்ளனர். பின்னர் பைக்கில் பலாசா – காசிபுக்கா இரட்டை நகரங்களில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெகனன்னா காலனிக்காக வீடுகள் கட்டப்பட்டு வரும் பகுதிக்கு 6 பேரும் சென்றுள்ளனர். தொடர்ந்து, அங்கு கேக் வெட்டி மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், சகோதரிகள் இருவரை அந்த இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

தொடர்ந்து, அவர் நடந்தது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனிடையே, இந்தக் கொடூர சம்பவத்தை மற்றொரு இளைஞர் தனது செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். இதனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோருக்கு விஷயம் தெரிந்தாலும், வெளியே கூறினால் அவமரியாதை ஆகிவிடுமோ எனக் கூறாமல் இருந்துள்ளனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, காசிபுக்கா போலீசார் மூன்று சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பலாசா எம்எல்ஏ சிரிஷா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, காசிபுக்கா காவல் நிலையத்திற்குச் சென்று பாதிப்பிற்கு உள்ளான தாயிடம் விவரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காசிபுக்கா கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒரு எம்எல்ஏவாக என்னை மிகவும் மனவேதனை அடையச் செய்துள்ளது. கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில், மாநிலம் முழுவதும் கஞ்சா போதை இளைஞர்கள் மத்தியில் மரம் போல் வளர்ந்துள்ளது. சிலர் உங்கள் ஆட்சியிலேயே இது போன்ற சம்பவம் நடப்பதாக கூறுகிறார்கள். ஆனால், கஞ்சா போதை, மாநிலம் முழுவதும் விஷம் போல் பரவி உள்ளது. அதனை ஒரே நாளில் அகற்ற முடியாது. அதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

இதையும் படிங்க : பெண்களை செல்போனில் போட்டோ எடுத்த காவலர்.. அதிரடி பணியிடை நீக்கம் செய்த ஆணையர்!

சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தால் பெற்றோர்கள் கூட வெளியே கூறினால் அவர்கள் எதிர்கால வாழ்க்கையை நினைத்து வெளியே கூற மறுத்து வந்தனர். குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடமும் அவர்கள் எதுவும் நடைபெறவில்லை எனக் கூறினர். ஆனால் ஒரு சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பெற்றோர் முன்வந்து புகார் அளித்துள்ளனர். இதனை யாரும் அரசியல் செய்ய வேண்டாம், யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர், தங்கள் பிள்ளைகள் கஞ்சா போதையில் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். அரசியல் பலம், பணபலம் இருப்பதற்காக இதனைப் பேசி தீர்க்க முயல நினைக்க வேண்டாம். யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 213

    0

    0