சூனா பானா-வாக நினைத்த குடிமகன்… சாகசம் செய்ய நினைத்தவருக்கு சாவு பயம் காட்டிய வெள்ளம்…!! வைரல் வீடியோ..
Author: Babu Lakshmanan26 July 2022, 9:01 pm
குடிபோதையில் பாலத்தின் மீது கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை கடக்க முயன்ற நபர் வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் கண்ணாபுரம் அருகே உள்ள காட்டாறுவில், சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக கரைபுரண்டு ஓடுகிறது. அந்த ஆற்றின் மீது போடப்பட்டுள்ள பாலத்திலும் தண்ணீர் வழிந்து ஓடுகிறது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை பாலத்தின் மீது ஓடும் தண்ணீரை கடந்து செல்ல முயன்ற கார் ஒன்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டது.
சற்று நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த நாகேஸ்வரராவ் என்பவர் குடிபோதையில் பாலத்தின் மீது ஓடும் தண்ணீரை கடந்து செல்ல முயன்றார். அப்போது, அந்தப் பகுதியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பாலத்தின் மீது செல்ல வேண்டாம் என்று நாகேஸ்வரராவை எச்சரித்தனர்.
ஆனால் முழு போதையில் இருந்த நாகேஸ்வர ராவ், யார் பேச்சையும் கேட்காமல், பாலத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது, பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால், அந்த வேகத்தை தாக்குபிடிக்க முடியாத அவர், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
சற்று தூரம் காட்டாற்றில் அடித்து செல்லப்பட்ட அவர், பின்னர் ஆற்றின் ஓரம் இருக்கும் மரத்தின் கிளையைப் பிடித்து உயிர் பிழைத்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.