நீட் போராட்டத்தில் அனிதா தியாகி… 7 ஆண்டுகளுக்கு பின் அனிதா குறித்து பொங்கும் கேரள காங்.!
Author: Udayachandran RadhaKrishnan16 June 2024, 10:26 am
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்ற பெயரில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் கடந்த 2013ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறது. ஆனாலும் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றத்தை அணுகி 2016ம் ஆண்டு வரை தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. அதே போன்று 2017ம் ஆண்டும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டன. ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் சீறிய வாதத்தினால் தமிழக அரசின் கோரிக்கை முழுமையாக நிராகரிக்கப்பட்டது.
அதன்படி 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 1176 என்ற நல்ல மதிப்பெண்ணை அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா பெற்றிருந்தார். முறையான பேருந்து வசதி கூட இல்லாத கிராமத்தில் இருந்து படித்து இப்படிப்பட்ட மதிப்பெண்ணை பெற்று சாதனை படைத்த மாணவி அனிதா தமிழக அரசுடன் சேர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி இறுதியில் தோற்கடிக்கப்பட்டார். நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் மாணவி அனிதா கலங்கிய கண்ணீருடன் பேசிய வார்த்தைகள் இன்றும் பலருக்கு நினைவிருக்கும்.
இதனைத் தொடர்ந்து நொறுங்கிய இதயத்துடன் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பிய அனிதா தனது மருத்துவ கனவு முழுமையாக நசுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் 2017ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சுமார் 7 ஆண்டுகள் கடந்த நிலையில் மாணவி அனிதா தொடர்பான பதிவு ஒன்றை கேரளா மாநில காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மிகவும் ஏழ்மையான மற்றும் தலித் குடும்பத்தில் இருந்து வந்தவர் மாணவி அனிதா. இவரது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். மேலும் 4 அண்ணன்களுக்கு கடைசி சகோதரியாக பிறந்த அனிதாவின் தாயார் அனிதா 2ம் வகுப்பு படிக்கும் போதே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். போதிய மருத்துவ சேவை கிடைக்காததால் அவர் உயிரிழந்ததாகவும், அப்பொழுது முதல் மாணவி அனிதா மருத்துவராகி தனது ஊருக்கு சேவையாற்ற வேண்டும் என்ற பறந்த எண்ணத்தோடு தனது படிப்பை தொடர்ந்துள்ளார்.
அதன்படி மாநில பாடத்திட்டத்தில் பயின்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தமாக 1200 மதிப்பெண்களுக்கு 1176 மதிப்பெண்கள் (98%) சேர்த்த அனிதா சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பண்ணை எடுக்க முடியவில்லை. மேலும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதாவுக்கு இறுதியில் தோல்வியே மிஞ்சியது. இதனால் கனத்த இதயத்துடன் தனது சொந்த ஊருக்கு வந்த அனிதா தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் அனிதாவின் குடும்பத்தினருக்கு பலரும் அதிகப்படியான நிதியுதவியை அளித்தனர்.
அந்த பணத்தை பயன்படுத்தி அனிதாவின் சொந்த கிராமமான குழுமூர் கிராமத்தில் அவரது சகோதரர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். தற்போது கிராமத்தில் உள்ள மாணவர்கள் பலரும் அந்த நூலகத்தை பயன்படுத்தி தங்கள் கல்வியை மேம்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்போது 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் கூட நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள் வாங்கி மருத்துவ கல்வியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் நீட் தேர்வு எப்படி ஒருதலைபட்சமானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.