நடிகைக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு மற்றொரு எம்எல்ஏ எதிர்ப்பு : சாலை மறியலில் ஈடுபட்ட தொண்டர் தீக்குளிக்க முயற்சி!
Author: Udayachandran RadhaKrishnan10 April 2022, 8:12 pm
புதிதாக அறிவிக்கப்பட்ட ஆந்திரா அமைச்சரவை பட்டியலில் நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதனால் இதுவரை நடிகை ரோஜா,சட்டமன்ற உறுப்பினர் ரோஜா என்று குறிப்பிடப்பட்ட அவர் இனிமேல் அமைச்சர் ரோஜா என்று குறிப்பிடப்பட இருக்கிறார்.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் விருப்பத்திற்கு ஏற்ப அவருடைய அமைச்சரவையில் பணியாற்றிய இருபத்தி நான்கு அமைச்சர்களும் தாங்கள் அமைச்சர் பதவிகளை இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில் இருபத்தி ஆறு அமைச்சர்களுடன் கூடிய புதிய ஆந்திர அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே அமைச்சரவையில் பணியாற்றிய 11 பேரின் பெயர்களும் 15 புதியவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
அந்த பட்டியலில் நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதனால் முதன் முதலாக ரோஜா அமைச்சராகி இருக்கிறார். எனவே நடிகை ரோஜாவாக இருந்து அரசியல்வாதி ரோஜாவாக அவதரித்து பின்னர் சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவாக உயர்வு பெற்று ஆந்திர மாநில தொழில்துறை உட்கட்டமைப்பு தலைவராக வளர்ச்சி கண்டு தற்போது அமைச்சர் ரோஜாவாக அவர் உயர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் ஓரிரு நாட்களில் புதிதாக அறிவிக்கப்பட்ட அமைச்சர்கள் உட்பட அனைத்து அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா ரெட்டிக்கு அமைச்சர் பதவி வழங்காததை கண்டித்து அந்தப்பகுதியில் அவருடைய ஆதரவாளர்கள் சாலைகளில் வாகனத்தை கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராமகிருஷ்ணா ரெட்டியின் ஆதரவாளரான பெண் ஒருவர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்காததை கண்டித்து தீயில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியினர் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினர்.