மகாராஷ்டிரா அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் : குஷியில் பாஜக.. மௌனம் காக்கும் சிவசேனா…!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 5:58 pm

மராட்டிய மேல்சபைக்கு 10 எம்.எல்.சி.க்களை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 11 பேர் போட்டியிட்டதால் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டனர்.

மும்பையில் உள்ள சட்டசபை வளாகத்தில் வாக்குப்பதிவு நடந்தது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 285 எம்.எல்.ஏ.க்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்ற சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து, சிவசேனா தலைவர்களில் ஒருவர் மற்றும் மராட்டிய மந்திரியான ஏக்நாத் ஷிண்டேவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடன் சேர்ந்து பல எம்.எல்.ஏ.க்களும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என மராட்டிய அரசியல் வட்டாரம் கூறுகிறது.
அவர்கள் குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்று விட்டனர் என கூறப்படுகிறது. இதேபோன்று, 15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

இதுபற்றி சஞ்சய் ராவத் கூறும்போது, மகா விகாஸ் அகாடி அரசை கவிழ்க்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து மராட்டியம் மிக வேறுபட்டது என்று பா.ஜ.க. நினைவில் கொள்ள வேண்டும். ஏக்நாத் ஷிண்டே ஜியை எனக்கு நன்கு தெரியும். அவர் ஓர் உண்மையான சிவசேனா சேவகர். எந்த நிபந்தனையும் இன்றி அவர் திரும்பவும் வருவார்.

குஜராத்தின் சூரத் நகரில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என நான் கேள்விப்பட்டேன். அவர்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள். நாம் அனைவரும் சிவசேனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என கூறியுள்ளார். அவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைத்தும் நன்றாக முடியும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:- தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்களை உண்ணிப்பாக கவனித்து வருகிறோம். சிவசேனாவில் நிலவும் குழப்பத்திற்கு சஞ்சய் ராவத்தின் அடாவடித்தனமான பேச்சுதான் காரணம். மராட்டிய அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு தற்போது பதில் அளிப்பது பொருத்தமாக இருக்காது.

அடுத்து என்ன நடக்கிறது என்பதை அறிய காத்திருக்கிறோம். மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த முன்மொழிவும் வரவில்லை. கட்சியிடம் இருந்தோ, ஏக்நாத் ஷிண்டேவிடம் இருந்தும் எந்த முன்மொழிவும் வரவில்லை, ஆதலால் மராட்டிய அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று கூறினார்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…