எந்த நேரத்திலும் எடியூரப்பாக கைதாகலாம் : சிறுமி பாலியல் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan13 June 2024, 6:39 pm
உதவி கேட்டு வந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார் எடியூரப்பா என மார்ச் மாதம் பெங்களூர் சதாசிவ நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆனால் தேர்தல் ஆதாயத்துக்காக இத்தகைய புகார் தெரிவிக்கப்படுகிறது என எடியூரப்பா மறுத்திருந்தார்.
அத்துடன் போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தம் மீது பொய்யான புகார் தரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படியான பல பொய் புகார்கள் என் மீது கூறப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக ஏற்கனவே விசாரணைக்கும் ஆஜரானேன். ஆனால் என்னிடம் விசாரணை நடத்தவில்லை.
என் குரல் மாதிரியை மட்டும் சேகரித்துவிட்டு அனுப்பினர். ஆகையால் இந்த பொய் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் எடியூரப்பா கோரியிருந்தார்.
இதனிடையே எடியூரப்பா மீது பலாத்கார புகார் கொடுத்த சிறுமியின் தாய் திடீரென இறந்தார். நுரையீரல் புற்று நோய் காரணமாக அந்த தாய் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில் போக்சோ வழக்கின் கீழ் எடியூரப்பாவை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் திடீரென கர்நடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து எடியூரப்பாவை விசாரணைக்கு வர அழைத்து சம்மன் அனுப்பியது சிஐடி. ஆனால் தாம் ஜூன் 17-ந் தேதிதான் விசாரணைக்கு வர முடியும் என எடியூரப்பா பதில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எடியூரப்பாவை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளது கர்நாடகா மாநில போக்சோ சிறப்பு நீதிமன்றம். இதனால் எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
முன்னதாக கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, “தேவைப்பட்டால்” போக்சோ சட்டத்தின் கீழ் எடியூரப்பா கைது செய்யப்படுவார். ஏற்கனவே சிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.