காலம் காலமாக உள்ள வழிபாட்டு முறையை செய்யும் தமிழர்களுக்கு தடை விதிக்க முயற்சி : திருப்பதி தேவஸ்தானம் மீது பக்தர்கள் குற்றச்சாட்டு!
Author: Udayachandran RadhaKrishnan16 April 2022, 1:08 pm
ஆந்திரா : தமிழர்களின் தொன்மையான வழிபாட்டு முறைக்கு திருப்பதி மலையில் தடைவிதிக்க முயன்ற தேவஸ்தான பாதுகாப்பு துறையினரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி மலைக்கு தினமும் 75 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் வருகின்றனர். அவர்களில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த தமிழர்கள் மட்டும் அதிக எண்ணிக்கையில் பாதயாத்திரையாக பஜனைகள் செய்து திருப்பதி மலைக்கு வருவது வழக்கம்.
பாதயாத்திரையாக பஜனை செய்தபடி கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது தமிழர்களுக்கு தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் வழக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் இது போல் ஏராளமான பக்தர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்தும் பாதயாத்திரையாக புறப்பட்டு பஜனைகள் செய்தபடி திருப்பதி மலைக்கு வருகின்றனர்
இதுவரை தமிழக மக்களின் இந்த தொன்மையான வழிபாட்டு முறைக்கு திருப்பதி மலையில் எவ்விதமான இடையூறும் ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த ஆண்டும் பக்தர்கள் பஜனை செய்தபடி திருப்பதி மலைக்கு தமிழகத்திலிருந்து வர துவங்கியுள்ளனர்
இந்த நிலையில் செங்கல்பட்டில் இருந்து பஜனை செய்தபடி பாதயாத்திரையாக திருப்பதியை அடைந்து அங்கிருந்து திருப்பதி மலைக்கு செல்ல முயன்ற பக்தர்கள் குழுவினர் திருமலைக்கு செல்ல தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் தடை விதித்தனர்.
மேலும் ஆர்மோனியம், தபேலா ஆகிய போன்ற வாத்தியக் கருவிகளை திருமலைக்கு எடுத்து செல்லக்கூடாது என்றும் அவர்கள் தடுத்து நிறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்தில் சாலையில் அமர்ந்து பஜனை செய்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி விரைந்து சென்று தேவஸ்தான பாதுகாப்பு துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக பக்தர்கள் திருப்பதி மலைக்கு பஜனை செய்தபடி செல்ல அனுமதி வாங்கி கொடுத்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பக்தர்கள் வாத்தியங்களுடன் பாடுவதுதான் பஜனை. பெருமாளுக்கு பஜனை மிகவும் பிடிக்கும். வாத்தியம் இல்லாமல் திருமலைக்கு சென்று பஜனை பாடு என்று சொல்வது விசித்திரமாக உள்ளது. இதுபோன்ற முரண்பாடான செயல்களில் தேவஸ்தானம் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று கூறினர்.