பிச்சை எடுப்பது போல நடித்து கட்சி பிரமுகரை கத்தியால் வெட்டிக் கொல்ல முயற்சி : ஷாக் சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
17 November 2022, 5:40 pm

மாலை போட்டு விரதம் இருப்பவர் போல் வேஷத்தில் வந்து தெலுங்கு தேசம் கட்சி உள்ளூர் தலைவரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி நகர தெலுங்கு தேச கட்சி பொறுப்பாளராக இருப்பவர் சேஷகிரி ராவ்.

இன்று காலை அவருடைய வீட்டிற்கு விஜயவாடா கனகதுர்கா கோவிலுக்கு மாலை போட்டு இருப்பவர் போன்ற வேஷத்தில் ஒருவர் வந்தார்.

சேஷகிரிராவை வெளியில் அழைத்து ஏதோ பேசி கொண்டிருந்த அந்த மர்ம நபர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை வெட்டி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதனால் கீழே விழுந்த சேஷகிரிராவின் கை, மார்பு ஆகிய உடல் பாகங்களில் காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த அவருடைய மனைவி படுகாயம் அடைந்த கணவரை மீட்டு உறவினர்கள் உதவியுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த துனி போலீசார் விரைந்து வந்து வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Anirudh’s reaction to parking fine at Vidamuyarchi show ‘விடாமுயற்சி’ முதல் நாளே அனிருத்துக்கு வந்த தலைவலி..தியேட்டர் வாசலில் காத்திருந்த அதிர்ச்சி..!