சரணடையும் முன்பு LIVE VIDEO.. வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு : குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!!
Author: Udayachandran RadhaKrishnan29 October 2023, 6:11 pm
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமச்சேரியில் இன்று கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான ஜெஹோவா சாட்சிகள் பிரிவினர் பங்கேற்ற சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
இந்த நிலையில் காலை 9.30 மணியளவில் இந்த கூட்டத்தில் மூன்று முறை பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். 36 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், என்ஐஏ அதிகாரிகளும் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காயமடைந்தவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதல் என உறுதி செய்யப்பட்டது. அங்கு வெடித்தது IED வகை “டிபன் பாக்ஸ் குண்டு” என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க, கேரள போலீசார் சார்பில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், பிரார்த்தனை கூட்டம் நடைபெற்ற அரங்கத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகமாகப் புறப்பட்டு வெளியே சென்றதை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரார்த்தனை கூட்ட அரங்கில் IED டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வைத்த நபரே அந்தக் காரை ஓட்டிச் சென்று இருக்கலாம், அதனால் தான் கூட்டம் நடைபெறும்போதே அவசரமாக வெளியேறி இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிப்பதால், சிசிடிவி கேமராவில் பதிவான நீல நிற காரை தேடி வருகின்றனர். அந்த நீல நிற காரில் சென்றவர்கள் யார் என போலீசார், இந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், களமச்சேரி குண்டுவெடிப்பு தொடர்பாக திருச்சூர் கொடக்காரா காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்தார். அந்த நபர், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு நான் தான் காரணம் எனக் கூறியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொடக்காராவுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய கேரள சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அஜித் குமார், “இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 45 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர் ஒரு பெண்ணாக இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. அவர் கடுமையான தீக்காயங்களால் இறந்தார்.
மற்றவர்களுக்கும் தீக்காயங்கள் உள்ளன. என்.ஐ.ஏ உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணை ஏஜென்சிகளும் சம்பவ இடத்தில் உள்ளன, நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம். கொடக்காரா போலீஸ் ஸ்டேஷனில் கொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் பைக்கில் வந்து தான் தான் இதற்குக் காரணம் எனக் கூறி சரண் அடைந்துள்ளார். அவரது பெயர் டொமினிக் மார்ட்டின். அவரும், ஜெஹோவாஸ் விட்னஸ் பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
டொமினிக் மார்ட்டின் சரணடைவதற்கு முன்பு குற்றத்தை ஒப்புக்கொண்டு பேஸ்புக் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் பேசும் டொமினிக் மார்ட்டின், தன் ஜெஹோவா’ஸ் விட்னெஸ் பி.ஆர்.ஓ என்றும், தங்கள் வழிகளை மாற்றும்படி ஜெஹோவாவின் சாட்சிகளை வலியுறுத்தியதாகவும் அதற்கு அவர்கள் மறுத்ததால் வெடிகுண்டு வைத்ததாகவும் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். எனினும், டொமினிக் மார்ட்டினின் பேச்சுகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.