கோவை குண்டுவெடிப்பும்… ராமேஸ்வரம் கஃபே பிளாஸ்ட்டும்…கிடைத்தது முக்கிய ஆதாரம் ; பெங்களூரூ விரைந்தது தமிழக குழு..!!!

Author: Babu Lakshmanan
2 March 2024, 2:38 pm

பெங்களூரூவில் உள்ள பிரபல உணவகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை விரிவடைந்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள பிரபலமான உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் மர்மப் பொருள் வெடித்து சிதறியதாகக் கூறப்பட்ட நிலையில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக முதலமைச்சர் சித்தராமையா கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பெங்களூருவின் எச்ஏஎல் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும், என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ராமேஸ்வரம் கஃபேவைச் சுற்றியுள்ள சுமார் 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.

அதில், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் ஓட்டலுக்கு வந்ததும், அவர் ரவா இட்லிக்கான டோக்கனை வாங்கிவிட்டு, அதனை சாப்பிடாமல், வெடிகுண்டு இருக்கும் பையை மட்டும் அங்கு வைத்து விட்டு சென்றது தெரிய வந்தது. அதுமட்டுமில்லாமல், அந்த நபர் அங்கிருக்கும் மரத்தின் பின்புறம் மறைந்திருந்திருந்து ஓட்டலை நோட்டமிட்ட புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரூ மக்களையே பீதிக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, 2வது நாளாக என்எஸ்ஜி மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பல்வேறு தடயங்களும், முக்கிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன.

இந்த குண்டு வெடிப்பிற்கு ஐஎஸ்டி பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. அதேபோல, டைமர் டிவைஸைப் பயன்படுத்தி இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வுக்காக தடயவியல் நிபுணர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். பொதுவாக, RDX போன்ற பயங்கர வெடிபொருட்களை வெடிக்க வைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், எதுக்காக இங்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணையை முடுக்கியுள்ளனர்.

மேலும், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது, ராமேஸ்வர கஃபேவின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சிறப்பு பூஜைகள் மற்றும் இலவச உணவுகள் வழங்கப்பட்டது. எனவே, இந்தத் தாக்குதலுக்கு இது ஏதேனும் காரணமாக இருக்குமோ..? என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளையில், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கோவையில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புள்ளதா..? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதலில் கார் சிலிண்டர் விபத்து என்று கூறப்பட்ட நிலையில், ஐஎஸ்டி பயன்படுத்தி வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த குற்றவாளி ஜமேஷா முபீனுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதும் தெரிய வந்தது. அதேபோல, மங்களூரூவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

பெங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டது எதற்காக என்று தெரியாத நிலையில், கோவை மற்றும் மங்களூரூ குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், விசாரணை அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ளது. பெங்களூரூ போலீசார் ஒருபுறமும், என்எஸ்ஜி மற்றொரு புறம் விசாரணையில் தீவிரம் காட்டி வருவதால், விரைவில் குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 291

    0

    0