தேர்தலே அறிவிக்கல… அதுக்குள்ளயா : எதிர்க்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த பாஜக… வெளியானது வேட்பாளர் பட்டியல்!!
Author: Udayachandran RadhaKrishnan17 August 2023, 5:04 pm
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ராஜஸ்தான், மிஸோரம், சத்தீஸ்கா், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டபேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அரசியல் சூழ்நிலையை நிர்ணயிக்கும் காரணியாகவும் இந்த 5 மாநில சட்டப்பேரவை அமையும் என கூறப்படுகிறது.
இதனால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளனர். இதில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில், மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக முழு மூச்சியுடன் செயல்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும், இன்னும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் வெளியாகும் என்றும் இம்மாதம் இறுதியில் தேர்தல் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவை பொது தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படும் முன்பே தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
இதில், மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலும், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டிலையும் பாஜக வெளியிட்டுள்ளது. இதனிடையே, 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.