காங்கிரஸ் முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய பாஜக… அரசியல் களத்தில் அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட்!!!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2023, 8:32 pm
காங்கிரஸ் முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய பாஜக… அரசியல் களத்தில் அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட்!!!
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், முதன்முதலில் பாரத ரத்னா விருதைப் பெற்றவர்களில் ஒருவருமானவர் ராஜாஜி. இவரது கொள்ளுப்பேரன் சி.ஆர் கேசவன் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்தார்.
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் விவகாரத்திலும், குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி எதிர்வினை ஆற்றியதால் சி.ஆர். கேசவன் அதிருப்தி அடைந்தார் என்று கூறப்படுகிறது. கட்சியில் இருந்து விலகியிருப்பது குறித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்த அவர் அதில் விளக்கத்தை கொடுத்திருந்தார்.
அதில், “20 ஆண்டுகளுக்கு மேலாக என்னை அர்ப்பணிப்புடன் கட்சிக்காக உழைக்க வைத்த விழுமியத்தின் மதிப்பு தற்போது கட்சியில் இல்லை. காங்கிரஸ் கட்சி தற்போது எதை அடையாளப்படுத்துகிறதோ, எதைக் குறிக்கிறதோ, அல்லது முன் வைக்க முற்படுகிறதோ அவற்றுடன் நான் உடன்படுகிறேன் என்று இனி நல்ல மனசாட்சியுடன் என்னால் கூற முடியாது.
அதனால்தான் நான் சமீபத்தில் தேசிய அளவில் ஒரு பொறுப்பை நிராகரித்தேன். மேலும் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்பதைத் தவிர்த்தேன். நான் ஒரு புதிய பாதையை தேர்வு செய்ய வேண்டிய நேரம் இது. எனவே, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததையும் தெரிவித்துவிட்டேன்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.
அப்போது பேசிய அவர், “உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாஜகவில் என்னை இணைத்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், குறிப்பாக நமது பிரதமர் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு நாளில் இது நடந்துள்ளது” என்று சி.ஆர். கேசவன் கூறினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர் கேசவன், “பிரதமர் மோடியின் மாற்றும் தலைமை நாட்டில் உள்ள அனைவருக்கும் உத்வேகம் அளித்துள்ளது. மேலும், பிரதமர் மோடியின் தலைமையை நாங்கள் நம்புகிறோம். அவர் எங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்வார் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு இவர் சென்றிருப்பது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
0
0