கோவிலை துடைப்பத்தால் சுத்தம் செய்து தரிசனம் செய்த குடியரசு தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்… வைரலாகும் எளிமையான செயல்!!
Author: Babu Lakshmanan22 June 2022, 1:07 pm
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு, ஒடிசாவில் கோவில் ஒன்றில் துடைப்பத்தால் தூய்மை செய்த பிறகு தரிசனம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் அடுத்த மாதம் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகளுக்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்தவரும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இது பழங்குடியினர் இனத்தை சேர்ந்த ஒருவர் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவது முதல்முறையாகும்.
குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திரவுபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒடிசாவில் உள்ள ராய்ரங்பூர் ஜகன்னாதர் கோயிலுக்கு வழிபாடு செய்ய திரவுபதி முர்மு சென்றார். அப்போது, கோயில் வளாகத்தைத் துடைப்பத்தால் சுத்தம் செய்த அவர், கோயில் மணியை அடித்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அங்கிருந்த நந்தி சிலையை ஆர கட்டித் தழுவினார்.
குடியரசு தலைவர் வேட்பாளராக இருந்தாலும் துடைப்பத்தால் தூய்மை செய்து தரிசனம் செய்த திரவுபதி முர்முவின் எளிமை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.