‘மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டோம்’…4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி: தொண்டர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி..!!
Author: Rajesh10 March 2022, 11:22 pm
புதுடெல்லி: 4 மாநில தேர்தல் வெற்றி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், 5-ல் 4 மாநில தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, 4 மாநில தேர்தல் வெற்றி மூலம் மக்கள் மனதில் நாம் இடம் பிடித்திருக்கிறோம். பாஜக அரசு மீதுள்ள மக்களின் நம்பிக்கையே இந்த வெற்றி காண்பிக்கிறது.
ஹோலி மார்ச் 10லிருந்து தொடங்கும் என தொண்டர்கள் உறுதி அளித்தனர். ஆனால் ஹோலி பண்டிகை இப்போதே தொடங்கி விட்டது. வெற்றிக்காக பணியாற்றிய பாஜக தொண்டர்களுக்கு நன்றி. பாஜக அரசு ஏழைகளுக்கு ஆதரவான அரசு.
பாஜக மீது ஏழை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை 4 மாநிலங்களின் தீர்ப்பு காட்டுகிறது. 4 மாநில தேர்தல் பாஜகவின் வெற்றி, ஒரு வரலாற்று சாதனை ஆகும். உ.பியில் 37 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சியே மீண்டும் வென்றுள்ளது. உ.பி.-யில் முதல்முறையாக பாஜக 2வது தொடர் வெற்றி பெற்றுள்ளது.
கோவாவில் அனைத்து கருத்துக் கணிப்புகளும் தவறு என நிரூபணமாகியுள்ளது. உத்தரகாண்டில் பாஜக புதிய வரலாற்றை படைத்துள்ளது. முதல்முறையாக ஒரு கட்சி மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.