விஐபி தரிசனத்தில் திருப்பதி ஏழுமலையானை வழிபட பிளாக் டிக்கெட் : கோவில் நிர்வாகியே விற்பனை செய்தது அம்பலம்.. தேவஸ்தானம் ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2022, 4:44 pm

திருப்பதி மலையில் நடைபெற்ற தரிசன டிக்கெட் கள்ள மார்க்கெட் விவகாரத்தில் காணிப்பாக்கம் கோவில் துணை நிர்வாக அதிகாரியிடம் போலீஸ் விசாரணை.

கர்நாடக மாநிலம் சிந்தாமணியை சேர்ந்த கேசவ மூர்த்தி என்பவர் தனக்கு ஏழுமலையானை வழிபட 12 விஐபி பிரேக் தரிசன டிக்கெட் தேவை என்று இடைத் தரகர் ஆன கருணாகர் என்பவரிடம் கேட்டிருந்தார்.

ஒரு டிக்கெட்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் 36 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் வாங்கி தருகிறேன் என்று கருணாகர் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் கேசவ மூர்த்தி ரூ.36,000 பணத்தை கருணாகர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் நேற்று திருப்பதி மலைக்கு வந்த கேசவ மூர்த்தியிடம் ரூ.300 டிக்கெட்களை கொடுத்து சாமி கும்பிடுவதற்காக கருணாகர் அனுப்பி வைத்தார். வி ஐ பி பிரேக் தரிசனத்திற்கு பதிலாக 300 ரூபாய் தரிசனத்தில் சென்ற கேசவ மூர்த்தி இது தொடர்பாக தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.

புகாரை பெற்று கொண்ட விஜிலென்ஸ் துறையினர் கருணாகரை பிடித்து விசாரணை நடத்தி திருமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையின் போது காணிப்பாக்கம் கோவில் துணை நிர்வாக அதிகாரி மாதவ ரெட்டியின் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் டிக்கெட்டுகளை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அலுவலகத்தில் இருந்து வாங்கி கேசவமூர்த்தியிடம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் மாதவ ரெட்டியை திருப்பதி மலைக்கு வரவழைத்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தரிசன டிக்கெட்டை வாங்கி முறைகேடாக கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்த கருணாகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ள மார்க்கெட் தரிசன டிக்கெட் விவகாரத்தில் கேசவ ரெட்டிக்கும் கருணாகருக்கும் இடையே பணம் ரீதியாக தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவாகரத்தில் துணை நிர்வாக அதிகாரி மாதவ ரெட்டிக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!