ஆளே இல்லாமல் கடலில் மிதந்து வந்த தெப்பம் : புத்தர் சிலை இருந்ததால் இலங்கையில் இருந்து வந்ததா என விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan2 February 2022, 6:22 pm
ஆந்திரா : நெல்லூர் அருகே கடலில் புத்தர் சிலையுடன் கூடிய மர்ம தெப்பம் மிதந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள இசக்கப்பள்ளி வங்கக்கடலில் படகு போன்ற தெப்பம் ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. கோவில்களில் தெப்போற்சவம் நடைபெறும் போது ஏற்பாடு செய்யப்படும் தெப்பம் போன்று மூங்கிலால் கட்டப்பட்ட அதனை மீனவர்கள் கரைக்கு இழுத்து வந்தனர்.
அதனுள் படுத்திருக்கும் நிலையில் புத்தர் சிலை ஒன்றும் புத்தர் சிலை எதிரில் சிவலிங்கம் ஒன்றும் உள்ளது. புத்தர் சிலையுடன் தெப்பம் காணப்படுவதால் அது ஸ்ரீலங்காவில் இருந்து கடலில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று அதனைக் கைப்பற்றி விசாரணை செய்யும் கடலோர காவல் படையினர் கருதுகின்றனர்.
தெப்பத்தில் ஆட்கள் யாரும் இல்லாத காரணத்தால் அதில் இருந்தவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வந்தபின் எங்காவது சென்று விட்டார்களா அல்லது கடலில் தவறி விழுந்து விட்டார்கள் என்ற ஐயப்பாடும் ஏற்பட்டுள்ளது.