திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு : தெப்பத்தில் புனித நீராடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan5 October 2022, 10:29 am
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை கோவில் திருக்குளம் ஆன சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு வராக சாமி கோவில் முக மண்டபத்தை அடைந்தனர்.
அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம்,ஹாரத்தி ஆகியவை நடத்தப்பட்டன. தொடர்ந்து சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்துக்குள் எடுத்து சென்ற தேவஸ்தான அர்ச்சகர்கள் மூன்று முறை நீரில் மூழ்க செய்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தினர்.
அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.
தொடர்ந்து உற்சவமூர்த்திகள் மாடவீதியில் வழியாக கோவிலை அடைந்தனர். இன்று மாலை நடைபெற இருக்கும் கொடி இறக்கத்துடன் ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.