அக்காவை காதலிக்க வற்புறுத்திய ஜிம் மாஸ்டர்.. தட்டிக் கேட்ட தம்பி பீர் பாட்டிலால் குத்திக் கொலை : தப்பியோடியவனை தேடும் போலீஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan28 April 2022, 6:11 pm
அக்காவை காதலிக்கச் சொல்லி வற்புறுத்திய உடற்பயிற்சி கூட பயிற்சியாளரை தட்டிக்கேட்ட தம்பியை குத்திக்கொலை செய்த கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருப்பதி தாசரி மடம் பகுதியை சேர்ந்தவர் கபிலா. இவர் தாய் மற்றும் தம்பி சந்தன் உடன் வசித்து வருகிறார்.
கபிலா திருப்பதியில் இயங்கி வரும் தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் வரவேற்பாளர் ஆக பணிபுரிந்து வந்தார். அதே உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த செஞ்சயா கபிலாவிடம் காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
செஞ்சயா தீய நடவடிக்கைகள் குறித்து அறிந்த கபிலா காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து செஞ்சயா கபிலாவை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
இதை அறிந்த கபிலாவின் தம்பி சந்தன் செஞ்சயாவிடம் சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய அக்காவை காதலிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் கபிலாவிற்கு வேறொரு நபருடன் திருமணம் முடிக்க தாயார் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செஞ்சயா கபிலாவிடம் தனக்கு ஆளுங்கட்சி அதிகார பலம் கொண்டவர்களுடன் நட்பு இருப்பதாகவும் என்னை திருமணம் செய்ய மறுத்தால் கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கபிலாவை செல்போனில் தொடர்பு கொண்ட செஞ்சயா தாசரி நகர் பகுதியில் இருப்பதாகவும் தன்னை வந்து சந்திக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு கபிலா மறுப்பு தெரிவிக்கவே இதைக்கண்ட சந்தன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று செஞ்சயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் செஞ்சயா சந்திரனை பீர் பாட்டிலை கொண்டு சராமாரியாக தாக்கி குத்தியுள்ளார்.
இதில் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த சந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து செஞ்சயா அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீசார் தப்பிச்சென்ற செஞ்சயாவை தீவிரமாக தேடி வருகின்றனர்