அண்ணியை கொலை செய்த கொளுந்தன்.. குழந்தைகளையும் விட்டு வைக்காத கொடூரம் : விசாரணையில் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan25 July 2024, 12:16 pm
திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அருகே இருக்கும் முனி ரெட்டி நகர் காலனியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் மோகன் என்பவர் அவருடைய அண்ணன் மனைவி சுனிதா, சுனிதாவின் இரண்டு குழந்தைகள் ஆன தேவி ஸ்ரீ,நீரஜா ஆகியோரை நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொலை செய்யப்பட்ட சுனிதாவின் கணவன் தாஸ் ஆசிரியராக வேலை செய்துவரும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தம்பி மோகனுக்கு விருப்பமில்லாத பெண் ஒருவரை தாஸ் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
திருமணம் நடைபெற்று ஓராண்டு ஆகிய நிலையில் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். ஆனால் தாஸ் தன் தம்பி, தம்பி மனைவி ஆகியோரை அழைத்து வந்து பெற்றோர், உறவினர் ஆகியோர் முன்னிலையில் சமாதானம் செய்து மீண்டும் ஒன்றாக வசிக்க செய்தார்.
ஆனால் அவர்கள் மீண்டும் பிரிந்து விட்டனர். இதனால் மனவேதனையில் இருந்த மோகன் தனக்கு விருப்பம் இல்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்த அண்ணன் தாஸ் மீது கடும் கோபத்தில் இருந்து இருக்கிறார்.
எனவே அண்ணனை பழிவாங்க முடிவு செய்து அவர் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டுக்குள் புகுந்து அண்ணன் மனைவி, அவருடைய இரண்டு குழந்தைகள் ஆகியோரை கொலை செய்து தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் மோகன் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மூன்று கொலைகள், ஒரு தற்கொலை ஆகியவை பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த திருப்பதி பல்கலைக்கழக போலீசார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.