உங்க மன்னிப்பை ஏற்க முடியாது : தண்டனைக்கு தயாராக இருங்க.. PATANJALI வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!

Author: Udayachandran RadhaKrishnan
10 ஏப்ரல் 2024, 2:56 மணி
babaa
Quick Share

உங்க மன்னிப்பை ஏற்க முடியாது : தண்டனைக்கு தயாராக இருங்க.. PATANJALI வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!

பதஞ்சலி நிறுவனம் தாங்கள் கண்டுபிடித்த மருந்து குறித்த தவறான விளம்பரங்களை மேற்கொண்டதற்காக அந்நிறுவனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதாவது, கொரோனா காலத்தில் அலோபதி மருத்துவ முறையை தவறாக சித்தரித்து விளம்பரம் வெளியிட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்தி வருகிறது. அந்தவகையில், பதஞ்சலியின் தவறான விளம்பரம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் ஆகியோர் மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர்.

ஆனால், அவர்களது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் காட்டமாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

அதன்படி நீதிபதிகள் கூறியதாவது, பதஞ்சலி நிறுவனத்திற்கு நாங்கள் தாராளமாக இருக்க விரும்பவில்லை. அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் என்பது வேண்டுமென்றே நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கீழ்படியாமல் இருப்பதாக தான் நாங்கள் கருதுகிறோம்.

அனைவரையும் ஒரே மாதிரித்தான் பார்க்கிறோம். இதனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் மீறக் கூடாது என்ற செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

நீங்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கும் போது மிக அலட்சியமாக நடந்து கொள்கிறீர்கள், அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்களுக்கு காட்டக்கூடாது? எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியுள்ளதால் பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் ஏற்க முடியாது.

உங்களது மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை. அதனை நிராகரிக்கிறோம் என்றும் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தனிநபர் குறித்த விஷயம் கிடையாது எனவும் காட்டமாக தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் எனவும் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேசமயம் பதஞ்சலி நிறுவன விவகாரத்தில் யாரெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவில்லையோ அவர்கள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

இதனிடையே, பொது மன்னிப்பு கேட்க கூட தயாராக இருக்கிறோம் என பாபா ராம்தேவ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 374

    0

    0