தெலுங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு.. எப்போது முடியும்?
Author: Hariharasudhan6 November 2024, 1:39 pm
தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
ஹைதராபாத்: நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக உள்ளிட்டோரின் நீண்ட கால கோரிக்கை ஆகும். அதிலும், குறிப்பாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியிருந்தார்.
அதேபோல், தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலின்போதும், காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்படும் எனவும் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் வாக்குறுதி அளித்து இருந்தனர். இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இன்று (நவ.6) முதல் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பு பணியானது, நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, அதன் அறிக்கைகள் பொதுத் தளத்தில் பதிவேற்றப்படும் என்றும் தெலுங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற தெலுங்கானா சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு. இருப்பினும், இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பில் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் என்ற தகவல் அரசுத் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
அதேநேரம், பிஆர்எஸ் தலைமையிலான ஆட்சியில், 2014ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அது குறித்தான தரவுகள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், தற்போதைய கணக்கெடுப்பு பணியில் 48 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 85,000 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதன் காரணமாக, தொடக்கப் பள்ளிகளுக்கு இந்த மாதம் அரைநாள் மட்டுமே வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “ஜார்கண்tடில் பட்டியலினத்தோருக்கு 28 சதவீத இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோருக்கு 12 சதவீதமாகவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமாகவும் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என இந்தியா கூட்டணி உறுதி அளித்துள்ளது” என ஹைதராபாத்தில், அம்மாநில காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசினார்.
இதையும் படிங்க : போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவு.. பரந்தூரில் தொடரும் போராட்டம்!