முதலமைச்சரின் மகளை நெருங்கும் மத்திய புலனாய்வுத்துறை : மதுபான ஊழல் வழக்கில் திடீர் திருப்பம்!!
Author: Udayachandran RadhaKrishnan21 November 2022, 7:59 pm
தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ். கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே பா.ஜ.க. எம்.பி.தர்மபுரி அரவிந்த், சந்திரசேகர ராவின் மகள் கவிதா காங்கிரசில் சேர போவதாக கருத்து தெரிவித்தார்.
இதனையடுத்து அவரது வீட்டை டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் இந்த 2 கட்சிகளுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த மதுபான ஊழல் வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அபிஷேக் போயின் பள்ளி என்பவரை மத்திய புலனாய்வு துறை கைது செய்தது.
இதனை தொடர்ந்து கவிதாவுக்கு நெருக்கமானவர் என நம்பப்படும் அருண் ராமச்சந்திரன் மற்றும் ஆடிட்டர் புச்சி பாபு ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை அடிப்படையில் சந்திரசேகர ராவ் கட்சியின் எம்.எல்.சி.க்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதா விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சந்திரசேகர ராவ் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். ஊழல்கள் குறித்து விசாரணையை தொடங்குவதில் டெல்லி அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனால் மத்திய அரசுக்கும் தெலுங்கானா மாநில அரசுக்கும் இடையே மற்றொரு மோதல் ஏற்படும் அறிகுறி ஏற்பட்டுள்ளது.