கோபாலபுர குடும்பத்திற்கு தரமான பதிலடி.. மக்களவையில் திமுக எம்பிக்கு கூலாக ரிப்ளை கொடுத்த நிதின் கட்கரி : பாராட்டிய அண்ணாமலை

Author: Babu Lakshmanan
10 February 2023, 8:02 pm
Quick Share

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மக்களவையில் வலியுறுத்திய தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனுக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அமைச்சர்களும் சளைக்காமல் பதிலளித்து வருகின்றனர். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது கேள்வி நேரம் தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில், மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய சென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், கடந்த 4 ஆண்டுகளாக சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளது என்றும், 100 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே, கிட்டத்தட்ட நான்கரை மணி நேரமாவதாகக் குறிப்பிட்டார். மேலும், சாலை சிதிலமடைந்து பரிதாபகரமான நிலையில் உள்ளதாகவும், வழக்கம்போல் இது எங்கள் தவறு அல்ல, ஒப்பந்ததாரர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் வேலை தாமதமாக நடைபெறுகிறது என்று மத்திய அரசு கூறுமா? என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் இணக்கமான முடிவுக்கு வரமுடியாத காரணத்திற்காக தமிழக மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அவரது பேச்சை பொறுமையாகக் கேட்ட மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சிரித்தபடியே திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு மட்டுமல்லாமல், தமிழக எதிர்கட்சி எம்பிக்களுக்கும் பதிலடி கொடுத்தார்.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பொறுத்தவரை, நானும் நேரில் சென்று பார்த்தேன். பிரச்னை என்னிடமோ, எனது துறையிடமோ இல்லை. நீங்கள்தான் ஒத்துழைப்புத் தரவேண்டும். கட்டுமானப் பொருட்கள் இல்லாத நிலை நிலவுகிறது. சில சமயங்களில் 3 மாதத்துக்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறீர்கள். 3 மாதத்துக்கு பிறகு மீண்டும் அனுமதி கோர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது எவ்வளவு கடினமானது தெரியுமா? அங்கு நிலம் கையகப்படுத்த முடியவில்லை. ஆகவே, குழிதோண்ட அனுமதி இல்லை. எல்லாவற்றும் மேலாக, சுற்றுச்சூழல் அனுமதி இல்லை, வனத்துறை அனுமதி இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி வேலையை விரைந்து பார்க்க முடியும்.

அதேசமயம், தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் பெங்களூரு நெடுஞ்சாலைப் பணிகள் மிகவும் துரிதமாகவும், நன்றாகவும் நடந்து வருகிறது. நாங்கள் தமிழ்நாட்டிற்கு நிறைய திட்டங்களை வைத்திருக்கிறோம். இதுகுறித்து பலமுறை தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்திருக்கிறேன். தமிழக முதல்வரிடமும் பலமுறை தகவல்களை பரிமாறி இருக்கிறேன். நிலம் இல்லாமல், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் எப்படி சாலையை விரைந்து அமைக்க முடியும்.

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலைப் பணிகளை இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்படி முடித்தால் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 2 மணி நேரத்தில் சென்று விட முடியும். ஆகவே, உங்களது ஒத்துழைப்பு எங்களுக்குக் கிடைத்தால் 100 சதவிகிதம் பணிகள் நிறைவடையும், என்று அதிரடியாக பதில் கூறினார்.

அதேபோல, திமுக எம்பி டிஆர் பாலுவும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு ஆவேசமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிலளித்தார். இந்தியாவில் எந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் உட்கட்டமைப்பு இல்லாமல் செயல்படவில்லை. எய்ம்ஸ் விவகாரத்தை தேவையில்லாமல் தமிழ்நாடு எம்பிக்கள் அரசியல் ஆக்குகின்றனர்.

போதிய ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாத இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் இயங்க அனுமதிக்க மாட்டேன்; அதுபோன்ற நடவடிக்கையை நான் எடுத்தேன். அதற்கான ரியாக்ஷன் தான் திமுக எம்பிக்களிடம் இருந்து வெளிப்படுகிறது, எனக் கூறினார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 389

    0

    0