செல்ஃபி எடுக்கும் போது அணைக்கட்டில் தவறி விழுந்த செல்போன்… 3 நாட்களாக அதிகாரி செய்த செயல் ; இறுதியில் நடந்த சோகம்..!!
Author: Babu Lakshmanan26 May 2023, 4:51 pm
சத்தீஸ்கரில் செல்ஃபி எடுக்க முயன்ற போது அணைக்கட்டில் செல்போன் தவறி விழுந்ததை தொடர்ந்து, அதிகாரி செய்த செயல் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் அவரது நண்பர்களுடன் பொழுதை கழிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது, தண்ணீர் தேங்கியிருந்த அணைப் பகுதியில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அந்த சமயம் எதிர்பாராத விதமாக, அவரது செல்போன் அந்த அணையின் தண்ணீரில் விழுந்துள்ளது. ஒரு லட்சம் மதிப்பிலான செல்போன் என்பதால், பதறிப்போன அதிகாரி ராஜேஷ் விஸ்வாஸ் உடனடியாக அங்கிருந்த ஊழியர்களை தண்ணீரில் இறங்கி தேடும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால், எவ்வளவு முயற்சித்தும் செல்போன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, டீசல் மோட்டரை பயன்படுத்தி அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து 3 நாட்கள் நடந்த இந்த தேடுதல் முயற்சிக்குப் பிறகு, நேற்று காலை செல்போன் கிடைத்துள்ளது. ஆனால், 72 மணிநேரத்திற்கும் மேலாக செல்போன் தண்ணீரிலேயே கிடந்ததால், அது செயல்படாமல் போனது.
இந்த நிலையில், செல்போனுக்காக அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றிய அதிகாரியின் செயல் கடும் விமர்சனத்திற்குள்ளாது. அதேவேளையில், இந்த தண்ணீர் பயன்பாடில்லாதது என்றும், உள்ளூர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகே, தண்ணீரை வெளியேற்றியதாக ராஜேஷ் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
0
0