திருப்பதி கோவிலில் பக்தி பாடல்களுக்கு பதில் சினிமா பாடல் : எல்.இ.டி திரைகளில் ஒளித்த பாடல்காளல் பக்தர்கள் அதிருப்தி!!
Author: Udayachandran RadhaKrishnan22 April 2022, 9:37 pm
ஆந்திரா : திருப்பதி மலையில் பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்த தேவஸ்தானத்தின் எஸ்.வி.பி.சி தொலைக்காட்சி ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் திருப்பதி மலையில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள பெரிய அளவிலான எல்இடி திரைகளில் ஒளிபரப்பாகும்.
திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் அவற்றை கண்டு பயனடைய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை திடீரென்று எஸ்.வி.பி.சி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு பதிலாக சினிமா பாட்டுகள் சுமார் அரை மணி நேரம் எல்இடி திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த தேவஸ்தான சேனல் ஊழியர்கள் பின்னர் அதனை மாற்றி எல்.இ.டி திரைகளில் வெங்கடேஸ்வரா பக்தி சேனல் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பிற்கு ஏற்பாடுகளை செய்தனர்.
ஏழுமலையான் பக்தி பாடல்கள் மற்றும் நாடகங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் சினிமா பாடல் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் ஏழுமலையான் பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.