தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல… பாஜகவின் பசப்பு அரசியல் ; மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி…!!

Author: Babu Lakshmanan
5 August 2023, 1:06 pm

இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய, மாநில அலுவல் மொழிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:- அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும். இந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்கு போட்டியான மொழி அல்ல. அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்டமூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக்கூடாது. அது நல்ல முயற்சியின் மூலமாக வரவேண்டும், எனக் கூறியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை மந்திரி அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல.

தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்காளமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை அமித் ஷா உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்!,’ என பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு எதிராகவும், ஆதரவாகவும் டுவிட்டரில் கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்