Pk-வால் பகல் கனவு கண்டதா காங்கிரஸ்..? திடுதிப்பென வெளியிட்ட அறிவிப்பால் ஷாக்..!! 2024 தேர்தலும் அவ்வளவுதானா..?

Author: Babu Lakshmanan
26 April 2022, 11:24 pm

2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி என்பதே எட்டாக் கனியாக இருந்து வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் படுதோல்வியே சந்தித்தது. இதனால், பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் என்ற பிம்பம் காணாமல் போய் விட்டது.

எனவே, 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பழையபடி எழுச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், சோனியாவுக்கு இன்னும் ஊக்கம் அளிக்கும் விதமாக, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியது. இதற்காக, ஒரே வாரத்தில் பல முறை சோனியா காந்தியை அவர் சந்தித்து தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த 85 பக்க விளக்கக்காட்சியின்படி பிரசாந்த் கிஷோர் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியது. பிரசாந்த் கிஷோர் கொடுத்துள்ள இந்த வியூகங்களை சோனியா காந்தி அமைத்துள்ள குழு ஆராய்ந்து வருகிறது.

ராஜஸ்தானில் நடக்கும் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோரின் விளக்கக்காட்சி குறித்து எடுத்துரைக்க இருப்பதாக கூறப்படுகிறது. கொள்கையளவில், பிரசாந்த் கிஷோர் அளித்த பெரும்பாலான பரிந்துரைகளை குழு ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளையில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், I-PAC அதன் எதிரணியான டிஆர்எஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் மூத்த தலைவர்கள் பலர் வருத்தமடைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பெரிய திருப்பம் ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது. ‘கடந்த சில நாட்களாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பல சந்திப்புகளை மேற்கொண்டார்.

பிரசாந்த் கிஷோருடனான விளக்கக்காட்சி மற்றும் கலந்துரையாடலைத் தொடர்ந்து, அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழு 2024ஐ உருவாக்கி, குழுவின் ஒரு பகுதியாக வரையறுக்கப்பட்ட பொறுப்புடன் கட்சியில் சேர அவரை அழைத்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. ஆனால் அவர் சேர மறுத்துவிட்டார். எங்கள் கட்சிக்கு அளிக்கப்பட்ட அவரது முயற்சிகள் மற்றும் பரிந்துரைகளை நாங்கள் பாராட்டுகிறோம்’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இதன்மூலம், காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் எதிர்பார்த்த பொறுப்போ, பதவியோ கிடைக்கவில்லை என்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேவேளையில், பிரசாந்த் கிஷோரை நம்பிய காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இது கருதப்படுமோ..? என்றும் சொல்லப்படுகிறது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1133

    0

    0