போலியான கருத்துக்கணிப்பு… கையும் களவுமாக சிக்கிய காங்கிரஸ் ; கர்நாடகாவில் மூழ்கும் விரக்தி என பாஜக விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
15 March 2023, 2:28 pm

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் குறித்த போலியான கருத்துக் கணிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டது அம்பலமாகியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு மே மாதம் முடிவடைய உள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக தற்போது 119 இடங்களைக் கொண்டுள்ளது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, குமாரசாமி முதல்வராக கூட்டணி ஆட்சிக்கு வந்தார். ஆனால் விரைவில் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, 2021ல் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. ஜூலை 2021-ல் எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பசவராஜ் பொம்மை தற்போது முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சிகரமான தோல்வி காத்திருப்பதாக ஆர்எஸ்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்ததாக கன்னட பிரபா என்னும் செய்தி நிறுவன பெயரில் சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்தன. அந்த செய்தியில், 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் கர்நாடக காங்கிரஸ் 115-120 இடங்களையும், பாஜக 65-70 இடங்களையும் கைப்பற்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடக சட்டசபையில் பாஜக 70 இடங்களுக்கு மேல் பெற வாய்ப்பில்லை. ஆய்வுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தலைவர் வி.நாகராஜூ மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். கர்நாடகாவில் பாஜக பின்னடைவைச் சந்தித்ததற்கு ஒரு முக்கிய காரணம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே நம்பகத்தன்மையை இழந்ததுதான். முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் போனதும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு குறைவதற்கு ஒரு காரணம், என்றும் கன்னட பிரபா பெயரில் செய்திகள் வெளியாகின.

ஆனால், இதுபோன்ற சர்வே-வை நாங்கள் நடத்தவில்லை என்றும், இது தொடர்பான செய்தியை நாங்கள் வெளியிடவில்லை என்று கூறிய கன்னட பிரபா செய்தி நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏசியாநெட் நியூஸ் எக்ஸிகியூடிவ் சேர்மன் ராஜேஷ் கல்ரா கூறுகையில், போலியான செய்திகளை பரப்பியதாக சைபர் போலீசில் புகார் அளிக்க இருப்பதாகவும், எங்களது பத்திரிகை நேர்மை, தைரியம் , உறுதி ஆகியவற்றை கோட்பாடுகளாகக் கொண்டு பத்திரிகை தர்மத்தை கடைப்பிடித்து வருவதால், இதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என தெரிவித்தார்.

இதனிடையே, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடகாவில் மூழ்கும் விரக்தியில் காங்கிரஸ் தந்திரங்களை பயன்படுத்தி வருகிறது. கன்னட பிரபா பெயரில் போலியான கருத்துக்கணிப்புகளுடன் போலியான கட்டுரைகளை வெளியிடுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போலிச் செய்திகளை பரப்பி இருப்பது காங்கிரஸ் கட்சியின் மீது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 421

    0

    0