பாஜகவை முந்திய காங்கிரஸ்… ராகுல் மட்டும் மிஸ்ஸிங்.. நாடாளுமன்றத் தேர்தலில் கைகொடுக்குமா..? வெளியான முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
23 December 2023, 11:56 am

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் காங்கிரஸ் கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அடுத்த அண்டும் மே அல்லது ஜுன் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் எதிர்கட்சிகளின் I.N.D.I. கூட்டணி அடுத்தடுத்து 4 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டது.

இந்த நிலையில், அனைத்திற்கும் ஒரு படி மேலாக, காங்கிரஸ் கட்சி அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கி விட்டது. அதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கான குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் நியமிக்கப்பட்ட 16 பேர் கொண்ட குழுவில், டி.எஸ்.சிங்தேவ் ஒருங்கிணைப்பாளராகவும் பிரியங்கா காந்தி, சித்தராமையா, சசி தரூர், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், கைக்கங்கம், கௌரவ் கோகோய், பிரவீன் சக்ரவர்த்தி, இம்ரான் பிரதாப்கார்ஹி, கே ராஜு, ஓம்கார் சிங் மார்க்கம், ரஞ்சித் ரஞ்சன், ஜிக்னேஷ் மேவானி, குர்தீப் சப்பல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இதில் ராகுல் காந்தியின் பெயர் இடம்பெறவில்லை. அதோபோல, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் தலைவர் கூட இடம்பெறவில்லை. காங்கிரஸ் கட்சியின் இந்த செயல் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, I.N.D.I.A. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நடத்த ஐந்து பேர் கொண்ட தேசியக் குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது. மோகன் பிரகாஷ் தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் முதலமைச்சர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகேல், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து இரு முறை ஆட்சியை பிடித்துள்ள பாஜக, தேர்தல் நடவடிக்கைகளில் இன்னமும் ஆர்வம் காட்டாத நிலையில், காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தீவிரம் காட்டி வருவது அக்கட்சியினரிடையே புது தெம்பை உண்டாக்கியுள்ளது என்றே சொல்லலாம்.

  • Ajith kumar Good Bad Ugly Remake of Korean Hit Movie கொரியன் படத்தின் காப்பியா GOOD BAD UGLY.? பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படத்தின் ரீமேக்?