பாஜகவுடன் கைக்கோர்த்த காங்கிரஸ்? அரவிந்த் கெஜ்ரிவால் புகாரால் குஜராத் தேர்தலில் புதிய திருப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2022, 6:23 pm

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. இதேபோல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது.

இதன்படி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று குஜராத் சென்றுள்ளார்.

ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கெஜ்ரிவால், குஜராத்தில் இன்று தேர்தல் நடந்தால் கூட ஆம் ஆத்மி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உளவுத்துறையின் அறிக்கை கூறுவதாக தெரிவித்தார்.

சிறிய வித்தியாசத்தில் தான் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று உளவுத்துறை அறிக்கை கூறுவதாக தெரிவித்த கெஜ்ரிவால், ஆட்சியை பிடிக்க குஜராத் மக்கள் பெருமளவு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

உளவுத்துறை அறிக்கையின் மூலம் அதிர்ச்சி அடைந்த பாஜக – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கைகோர்த்து உள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக பாஜக, தங்கள் எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதற்காக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக கெஜ்ரிவால் கூறினார்.

உளவுத்துறையின் இந்த அறிக்கை தனக்கு நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் கிடைத்ததாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…