காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக் கொலை… நாளை இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் பயங்கரம்..!!
Author: Udayachandran RadhaKrishnan26 February 2023, 10:20 am
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்ஹர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மம்தா தேவி. 2016-ம் ஆண்டு துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மம்தா தேவிக்கு கடந்த டிசம்பர் மாதம் கோர்ட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மம்தா தேவியின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டு ராம்ஹர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராம்ஹர் தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் மம்தா தேவியின் கணவர் பஜ்ரங் மொடோ வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ராம்ஹர் மாவட்டம் ராம்ஹர் தொகுதியில் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதே மாவட்டத்தின் பட்ரது நகர காங்கிரஸ் நிர்வாகி ராஜ்கிஷோர் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று இரவு 8 மணிக்கு சைவா பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்த ராஜ்கிஷோரை அங்கு வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட ராஜ்கிஷோர் ராம்ஹர் மாவட்டத்தின் பர்கஹான் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அம்ப பிரசாதின் நெருக்கிய நபராவார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காங்கிரஸ் தலைவரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.