காங்கிரஸ் கட்சிக்கு டாட்டா காட்டிய எம்எல்ஏ.. ராஜினாமா செய்ததால் திடீர் ட்விஸ்ட் : பின்னணியில் பாஜக?

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2023, 2:43 pm

காங்கிரஸ் கட்சிக்கு டாட்டா காட்டிய எம்எல்ஏ.. ராஜினாமா செய்ததால் திடீர் ட்விஸ்ட் : பின்னணியில் பாஜக?

குஜராத் மாநிலத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 192 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் அக்கட்சியின் சாதனை பயணம் மேலும் 5 ஆண்டுகளாக தொடர இந்த தேர்தல் வழிவகுத்தது.

மாறாக காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், ஆம்ஆத்மி கட்சி 5 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் தான் காங்கிரஸ் சார்பில் காம்பாட் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிராக் படேல் இன்று திடீரென்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

குஜராத் சபாநாயகர் சங்கர் சவுத்ரியை இன்று சந்தித்த சிராக் படேல் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். அதன்பிறகு சிராக் படேல் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், எனது ராஜினாமாவுக்கு பல காரணங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் நாட்டுக்கு எதிராக உள்ளன. மேலும் காங்கிரஸ் தலைவர்கள் நேர்மறையான எண்ணத்துடன் எதையும் அணுகுவது இல்லை” என குற்றம்சாட்டினார்.

தற்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள சிராக் படேல் இந்த முறை தான் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு காம்பாட் தொகுதியின் எம்எல்ஏ ஆனார். இத்தகைய சூழலில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ஓராண்டுக்குள் ராஜினாமா செய்துள்ளார். இதனால் குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்பது 17 ல் இருந்து 16 ஆக சரிந்துள்ளது.

இதற்கிடையே தான் சிராக் படேலின் ராஜினாமாவுக்கு பின்னணியில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவருக்கு கட்சியில் உள்ள சில தலைவர்களுக்கும் இடையே மனஸ்தாபம் இருப்பதாகவும், இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர் விரைவில் பாஜகவில் இணையலாம் எனவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. அதோடு குஜராத்தில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏனென்றால் கடந்த வாரம் ஆம்ஆத்மி கட்சியின் விசாவதர் தொகுதியின் எம்எல்ஏவான பூபட் பயானி ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து காங்கிரஸின் சிராக் படேல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 314

    0

    0