ரூ.20,000 கோடி செலவு செய்தும் கங்கை தூய்மையாகாதது ஏன்..? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி!!
Author: Babu Lakshmanan14 May 2024, 9:14 pm
கங்கையில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கட்சி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அதற்கான வேட்மனுவை பிரதமர் மோடி இன்று தாக்கல் செய்தார். ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இத்தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அப்போது பேசிய மோடி, “கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. ரூ.140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்றார். தாய் குறித்து பேசும்போது பிரதமர் மோடி கண்கள் கலங்கி குரல் தழுதழுத்தது.
மேலும் படிக்க: டாஸ்மாக் கடையில் தகராறு… நடுரோட்டில் இருதரப்பினர் இடையே மோதல் ; ஈரோட்டில் பரபரப்பு!!
இந்நிலையில், கங்கை நதி குறித்து மோடி பேசியது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சில கேள்விகளை கேட்டுள்ளார். அதாவது, கங்கை நதியை தூய்மை செய்கிறோம் என ரூ.20,000 கோடி செலவு செய்த நிலையிலும், கங்கை தூய்மையாக இல்லையே ஏன்? என்றும், மோடி, தான் தத்தெடுத்த வாரணாசி கிராமங்களை கைவிட்டது எதற்கு? என்றும், வாரணாசியில் மகாத்மா காந்தியின் பெருமையை அழிக்க மோடி திட்டமிடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.