இண்டி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் சிக்கல்…? மம்தா பரிந்துரையை நிராகரித்த கார்கே…! எதிர்க்கட்சிகளின் புதிய வியூகம்!!

Author: Babu Lakshmanan
20 December 2023, 9:03 pm
Quick Share

28 எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து அமைத்துள்ள இண்டியா கூட்டணியில் எப்போது என்ன நடக்கும் என்பது யாராலும் யூகிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

டிசம்பர் 19ம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஒரு நாள் முன்னதாகவே டெல்லி வந்த மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசும்போது உறுதிபட ஒரு கருத்தை தெரிவித்தார்.

“இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்குப் பின்புதான் அனைவரும் சேர்ந்து முடிவு செய்வோம். எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் பங்கு என்னவாக இருக்கும் என்று கேட்கிறீர்கள். மற்ற கட்சி பற்றி நான் எதுவும் கூற முடியாது. அதேநேரத்தில், இண்டியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியோடும் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய, பொதுக் கூட்டத்தில் பங்கேற்க நான் தயாராகவே இருக்கிறேன்.

நாடாளுமன்ற மக்களவையில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து கேட்கிறீர்கள். அவர்களால் நாடாளுமன்றத்தையே பாதுகாக்க முடியவில்லை என்றால், எவ்வாறு நாட்டை பாதுகாப்பார்கள். இது மிக ஆழமான கேள்வி. இந்த விவகாரம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகத்தை வகுக்க டெல்லியில் நடந்த “இண்டியா” கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, முதலமைச்சர்கள் நிதிஷ்குமார், ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனாவின் ஒரு பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இக் கூட்டம் நடந்தபோது மம்தா பானர்ஜி அப்படியே ஒரு யூ டேர்ன் அடித்தார். முதல் நாள் ஒரு பேச்சு, மறுநாள் இன்னொரு பேச்சு என்று அரசியல்வாதிகளை கிண்டலடிப்பது போல அவருடைய கருத்து இருந்ததுதான் இதற்கு முக்கிய காரணம்.

இந்த உண்மையை பொது வெளியில் போட்டு உடைத்தவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோதான். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இண்டியா கட்சிகளின் கூட்டத்தில், மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். யாரும் இதனை எதிர்க்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

அதேநேரம், “தொகுதி பங்கீடு குறித்து டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிவு செய்து விடவேண்டும். எங்கள் மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்ப இடங்களை பகிர்ந்து கொள்வோம். எனினும் 2024 தேர்தலில் 300 தொகுதிகளுக்கும் குறையாமல் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்” என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் “பஞ்சாபில் தங்களது கட்சி 10 இடங்களிலும், டெல்லியில் நான்கு தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகிறது. அதற்கு காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவேண்டும்” என கூட்டத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.

வைகோ ஊடகங்களிடம் தெரிவித்த தகவலால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தர்ம சங்கடமான நிலை உருவானது. இதனால் பதறிப்போன அவர், “முதலில் வெற்றி பெறுவோம், பிரதமர் முகம் பற்றி பின்னர் விவாதிப்போம். மேலும் இப்போது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்து ஜனவரி இரண்டாவது வாரத்துக்குள் முடிவு செய்யப்படும். இதற்காக எங்கள் கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து இருக்கிறோம். இண்டியா கூட்டணி பாஜகவுக்கு எதிரான நாடு தழுவிய தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரி 30 ம் தேதி முதல் முன்னெடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது”என்று தெரிவித்தார்.

மல்லிகார்ஜுன கார்கே தனக்குப் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ஆசையெல்லாம் கிடையாது என்று மறுத்தாலும் கூட அவர் இப்படி சொன்னதற்கு முக்கிய காரணம் ராகுல் காந்தியின் கோபத்திற்கு உள்ளாக நேரிடலாம் என்பதுதான். ஏனென்றால் காங்கிரஸ் முன்னெடுக்கும் பெரும்பாலான போராட்டங்களை அறிவிப்பது,
முன் நின்று நடத்துவது ராகுல்தான். காங்கிரஸின் தலைவராக கார்கே இருந்தாலும் அவர் ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோரின் கட்டுப்பாட்டில்தான் அவர் இயங்குகிறார். அதனால்தான் எனக்கு பிரதமர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்கிறார். மேலும் இப்படியொரு யோசனையை தெரிவித்தவர்கள் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் என்பதால் கார்கேவுக்கு இயல்பாகவே இன்னொரு பயமும் வந்துவிட்டது.

ஏனென்றால் இவர்கள் இருவருக்குமே ராகுல் காந்தியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் எந்த வகையிலும் இண்டியா கூட்டணி கட்சிகளிடம் திணித்து விடக்கூடாது. அப்படி செய்தால் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு தோல்வி நிச்சயம்
என்ற எண்ணத்தின் அடிப்படையில் அதை வெளிப்படையாக தெரிவித்தால் சிக்கலாகிவிடும் என்று கருதி அதற்கு மாற்றாக கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்கிற யோசனையை மம்தாவும், கெஜ்ரிவாலும் தெரிவித்து இருக்கலாம்.

“பாஜகவுடன் காங்கிரஸ் குறைந்த பட்சம் 300 தொகுதிகளிலாவது நேருக்கு நேர் மோதவேண்டும் என்ற மம்தாவின் விருப்பம் எப்படி நிறைவேறும் என்பதுதான் தெரியவில்லை” என்று டெல்லியில் மூத்த அரசியல் நோக்கர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

“ஏனென்றால் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், அசாம், இமாச்சலப் பிரதேசம், அரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில்தான் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் நேரடி போட்டி நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த மாநிலங்களில் மொத்தமே 170 தொகுதிகளுக்குள்தான் இருக்கின்றன.

உத்தரப்பிரதேசம், பீகார், மராட்டியம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, பஞ்சாப், டெல்லி, தெலுங்கானா, ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 340க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. இவற்றில் ஓடிசா, ஆந்திரா, டெல்லி ஆகிய மூன்றிலும் காங்கிரஸ் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது.

அதேநேரம் தமிழகம், பீகார், மராட்டியம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம், கேரளா, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இண்டியா கூட்டணி கட்சிகள் காங்கிரஸுக்கு 55 தொகுதிகளுக்கு மேல் விட்டுக் கொடுக்க வாய்ப்பே இல்லை. இந்த கணக்கின்படி எப்படி பார்த்தாலும் பாஜகவும், காங்கிரசும்
225 தொகுதிகளுக்கு மேல் நேரடியாக மோத முடியாது என்பதுதான் எதார்த்த நிலை.

அப்படி இருக்கும்போது இண்டியா கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் பெரிய அளவில் தியாகம் செய்தால் மட்டுமே காங்கிரஸ் 300 இடங்களில் பாஜகவுக்கு எதிராக நேருக்கு நேர் மோத முடியும்.

அதனால் ஆலோசனை என்கிற பெயரில் மம்தா பானர்ஜி தன் இஷ்டம் போல் காங்கிரசுக்கு ஆதரவாக அள்ளிவிட்ட கதையாகவே இது தென்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக ஒன்பது தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் மராட்டியம், பீகார், மேற்கு வங்கம் கேரளா, உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

தொகுதி பங்கீட்டின்போது இந்த நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். மேலும் இண்டியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுடன் மோதுவது அக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவே அமையும்.

அதனால்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் இரண்டு இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து வண்ண புகை குண்டுகளை வீசிய நிகழ்வை இண்டியா கூட்டணி தீவிர தேர்தல் பிரச்சாரமாக முன்னெடுக்க மம்தா விரும்புவது தெரிகிறது.

ஆனால் எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கம், தமிழகம், ஜார்கண்ட், டெல்லி மாநிலங்களில் ஊழல் குற்றச்சாட்டு பெரிய அளவில் கூறப்படுவதால் அதை மறைப்பதற்காக நாடாளுமன்றத்தில் அத்துமீறி இளைஞர்கள் நுழைந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் 2024 தேர்தல் நடந்து முடியும் வரை பேசிக் கொண்டே இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

என்றபோதிலும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்து தேர்தல் களத்தை எதிர்க்கட்சிகள் சந்திக்காதவரை இந்தப் பிரச்சாரத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் அளவிற்கு பலன் கிடைக்க வாய்ப்பில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது மோடிக்கு பெரிய பிளஸ் பாயிண்டாகவே அமையும்” என்று டெல்லியில் அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் சொல்வதும் ஏற்கக் கூடிய ஒன்றாகவே உள்ளது!

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 426

    0

    0